×

விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை: குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உறுதி

மதுரை, செப். 30: மதுரையில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தி்ல அனைத்து கோரிக்கைகள் மீதம் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அனீஷ் சேகர் உறுதியளித்தார்.
மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன் மற்றும் பொதுப்பணித்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால், அப்பகுதி விவசாயிகள் சார்பில் கலெக்டருக்கு மரக்கன்று கொடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து, விவசாயிகள் மாரியப்பன், ராமன், பழனிசாமி, பாலுச்சாமி, தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பேசும்போது, ‘தமிழக முதல்வர் விவசாயிகளுக்கான கால்நடை வளர்ப்பு திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, கால்நடைகள் வாங்கி தருகின்றனர். இந்த அற்புதமான திட்டத்தை வரவேற்கிறோம். சமீபத்தில், பேரையூர் பகுதியில் வழங்கப்பட்ட ஆடுகளில் சில இறந்து விட்டன’ என்றனர்.இதற்கு கலெக்டர் அனீஷ்சேகர், இதுபற்றி விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.வாடிப்பட்டி பகுதியில் நெல்கொள்முதல் மையம் செயல்பட துவங்கியுள்ளது. அங்கு பணியாற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ரூ.50 வரை கையூட்டு பெறுவதாக புகார் உள்ளது. இதனை தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

நுகர்பொருள் வாணிப கழக அலுவலர் இந்திரவள்ளி கூறுகையில், ‘‘இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.விவசாயிகளுக்கு தேவையான பொட்டாஷ், யூரியா உள்ளிட்ட உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவையான அளவு கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கியில் இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கால்நடை மருத்துவமனைகளை மாலை 2 முதல் 5 மணி வரை திறந்து இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் விவசாயிகள் வைத்தனர்.கலெக்டர் அனீஷ்சேகர் பேசும்போது, ‘‘விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ