×

கடலில் மீன் பிடிக்க விடாமல் தொல்லை: லாஞ்சரில் வந்து பயங்கர ஆயுதங்களால் மீனவர்கள் மீது தாக்குதல்

மாமல்லபுரம், செப்.29: மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார மீனவ குப்பங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை, பெரிய லாஞ்சரில் வந்து மீன் பிடிக்கும் மீனவர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்குகின்றனர். இதனை, தமிழக கடலோர காவல் படையோ அல்லது மீன் வளத்துறையோ கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாமல்லபுரம் சுற்று வட்டார மீனவ குப்பங்களான வெண்புருஷம், கொக்கிலமேடு, தேவனேரி குப்பம், சாலவான்குப்பம், பட்டிப்புலம் குப்பம், சூளேரிக்காடு குப்பம், நெம்மேலி குப்பம், வட நெம்மேலி குப்பம், புதிய கல்பாக்கம், புதிய எடையூர் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 3500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இவர்களின், பிரதான தொழில் மீன்பிடித்தல். மேலும், மேற்கண்ட குப்பங்களில் உள்ள மீனவர்கள் தினமும் சிறிய வகை படகில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்து விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, இங்குள்ள மீனவர்கள் அனைவரும் சிறிய வகை படகுகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். மேலும், மீனவர்கள் தங்களது உயிரை பனையம் வைத்து தான் கடலில் மீன்பிடிக்க செல்கின்றனர். கடலில், ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்று மீன் பிடிக்கும்போது புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமேஷ்வரம் மற்றும் கன்னியாக்குமரி மீனவர்கள் பெரிய லாஞ்சரில் வந்து பெரிய அளவிலான வலைகளை வீசி அனைத்து மீன்களையும் பிடித்து விடுகின்றனர்.

இதனால், இங்குள்ள மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சுகிறது. மேலும், பெரிய லாஞ்சரில் வந்து மீன்பிடிப்பவர்கள் சிறிய வகை படகில் சென்று மீன்பிடிக்கும் மீனவர்களை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி படகு மற்றும் வலைகளை அறுத்து சேதப்படுத்தி தப்பித்து ஓடி விடுகின்றனர். இதனால், சிறிய படகில் செல்லும் மீனவர்கள் அடிக்கடி காயமடைவதும், படகுகள் சேதமடைவது தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இது சம்பந்தமாக, பல முறை கடலோர காவல் படை அதிகாரிகளுக்கும், மீன் வளத்துறை அதிகாரிகளுக்கும் நேரில் சென்று புகார் தெரிவித்தும், எழுத்துப் பூர்வமாக கடிதம் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மீனவர்கள் குமுறுகின்றனர்.

இதுகுறித்து மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் கூறுகையில்,  ‘மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார மீனவ குப்பங்களில் 3500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். எங்களுக்கு, பிரதான தொழிலாக மீன்பிடித்தொழில் உள்ளது. மீன்பிடி, தொழிலை மட்டுமே நம்பி மட்டுமே வாழ்கிறோம். இங்குள்ள, மீனவர்கள் சிறிய வகை படகில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு சென்று மீன் பிடிக்கும்போது, கடலூர், நாகை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமேஷ்வரம், கன்னியாக்குமரி உள்ளிட்ட பகுதிகளில் பெரிய லாஞ்சர் வைத்திருப்பவர்கள் வந்து நீங்கள் இங்கு மீன்பிடிக்கக்கூடாது என ஆயுதங்களை காட்டி மிரட்டி அனைத்து மீன்களையும் பெரிய வலைகளை வீசி பிடித்துச்செல்வதோடு, எங்களை கத்தி, இரும்பு ராடு, பெரிய குச்சி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குவது மட்டுமல்லாமல் மீன்பிடி வலைகளை அறுத்து படகுகளை சேதப்படுத்தி விடுகின்றனர்.

சில நேரங்களில் லாஞ்சரை கொண்டு சிறிய படகு மீது மோதி கவிழ்த்து விடுகின்றனர். இதனால், காயமடைந்து தண்ணீரில் நீந்தி கரை வந்து உயிர் பிழைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஒரு சில நேரங்களில் கை, கால்கள் உடைந்து நீந்தி கரை வந்து சேர முடியாமல் உயிரிழந்து விடுகின்றனர். இதேநிலை, தொடர்ந்தால் இங்குள்ள மீனவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. இது சம்பந்தமாக, கடலோர காவல் படை மற்றும் மீன்வள துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், கடிதம் எழுதியும் மீனவர்களின் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக கடலோர காவல் படை போலீசார் இல்லாததால், அத்துமீறி பெரிய லாஞ்சரில் வந்து தாக்குகின்றனர். எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு 24 மணி நேரமும் கடலோர காவல் படை போலீசாரை பணியமர்த்தியும், பெரிய லாஞ்சரில் வந்து மீன்பிடிக்கும் மீனவர்களை தடுத்தி நிறுத்தியும், இங்குள்ள மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்றனர்.

பூட்டியே கிடக்கும் கடலோர காவல் படை அலுவலகம்
மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயில் கடலோர காவல்ப்படை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகவே பூட்டிக்கிடக்கிறது. இந்த அலுவலகத்துக்கு எந்த அதிகாரியும் வருவதில்லை. இது குறித்து மீனவளத்துறை அதிகாரிகளிடம் கேட்டாலும் அலுவலகம் குறித்து எந்த பதிலும் கிடைப்பதில்லை.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...