கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட்டில் போலீசார் பாதுகாப்பு பணி

கும்பகோணம், செப். 29: கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட்டில் போலீசார் நேற்று தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் என்.ஐ.ஏ அமைப்பு தமிழகத்தில் நடத்திய சோதனையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீஸ் துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவின் பிரபலமான இஸ்லாமிய அமைப்பான பி.எஃப்.ஐ கட்சி செயல்பட ஐந்து ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக பி.எஃப்.ஐ அமைப்பினர் வன்முறையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறி நாடு முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பி.எஃப்.ஐ கட்சிக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறி கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், பேபி உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  சுமார் 2 மணி நேரம் காத்திருப்பை தொடர்ந்து பி.எஃப்.ஐ கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்டோரை கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதனால் மார்க்கெட் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: