அனைத்து விதமான நாய்களுக்கும் வருடந்தோறும் வெறிநோய் தடுப்பூசி போட வேண்டும்: கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் (பொ) தகவல்

மன்னார்குடி, செப்.29: அனைத்து விதமான நாய்களுக்கும் வருடந்தோறும் வெறிநோய் தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும் என்று மன்னார்குடியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் (பொ) டாக்டர் ராமலிங்கம் கூறினார். உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம் கால்நடை மருத்துவர் மும்மூர்த்தி தலைமையில் மன்னார்குடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் டாக்டர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இம்முகாமில், டாக்டர்கள் கார்த்திக், ராகவி ஆகியோர் அடங்கிய மருத்துவகுழுவினர் 75 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசிகளை போட்டனர்.

‘இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் (பொ) டாக்டர் ராமலிங்கம் கூறுகையில், வெறி நோய் எனப்படும் ரேபிஸ் ஒரு கொடிய வைரஸ் நோய் ஆகும். மரணத்தை தேடி தரும் இந்நோயை நாய்கள்தான் அதிகளவில் பரப்புகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய் கடிப்பதால் கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெறி நோய் தாக்கி விட்டால் குணப்படுத்துவது மிகவும் கடினமானது ஆகும். தடுப்பூசி மட்டுமே இந்த நோயில் இருந்து கால்நடைகளையும், மனிதர்களையும் காக்கும். எனவே, அனைத்து விதமான நாய்களுக்கும் வருடந்தோறும் வெறிநோய் தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும் என்றார். முகாமிற்கான ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்பு உதவியாளர் நடராஜன், மேற்பார்வையாளர் சின்னக்காளை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories: