திருவாரூரில் டாஸ்மாக் ஒப்பந்த தொழிலாளர்கள் போனஸ்கேட்டு சாலை மறியலில்

திருவாரூர், செப்.29: திருவாரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த மதுபான கடைகளுக்கு திருவாரூர் அருகே விளமல் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கிடங்கில் இருந்து லாரிகள் மூலமாக தினந்தோறும் மதுபான பாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் டாஸ்மாக் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.8 ஆயிரத்து 400 போனஸ் வழங்க வேண்டும், லாரியில் கொண்டு செல்லப்படும்பொழுது மது பாட்டில்கள் உடைப்பு ஏற்பட்டால் அதற்கு உரிய தொகையை ஒப்பந்த தொழிலாளர்களின் வருமானத்திலிருந்து பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி நேற்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது கோரிக்கைகள் நிறைவேறாததால் அதனை கண்டித்து சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஒப்பந்த தொழிலாளர்கள் திருவாரூர் -மன்னார்குடி நெடுஞ்சாலையில் கூட்டுறவு நகர் என்கிற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவயிடத்திற்கு சென்ற தாலுகா போலீசார் ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: