×

கறம்பக்குடி அரசு கல்லூரியில் விரிவுரையாளர்கள் நியமனம் கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கறம்பக்குடி, செப்.28: கறம்பக்குடி அருகேயுள்ள அரசு கல்லூரியில் விரிவுரையாளர்கள் நியமனம் செய்யக்கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கறம்பக்குடி அருகே மருதன் கோன்விடுதி கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அரசு கலை கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பல்வேறு பாட பிரிவுகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட காலத்தில் இருந்து இக்கல்லூரிக்கு 42 விரிவுரையாளர்கள் தேவை. ஆனால் கடந்த ஆட்சியில் 2 விரிவுரையாளர்கள் மட்டுமே அரசு நியமித்தும் 17 விரிவுரையாளர்கள் தற்காலிக பணியில் வேலை பார்த்து வருகின்றனர்.

இதன் காரணமாக மாணவ, மாணவிகள் பாதித்து வருகின்றனர் என்ற அடிப்படையில் கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகள் நேற்று காலை திடீரென்று வகுப்புகளை புறக்கணித்து வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கறம்பக்குடி வருவாய் துறை துணை தாசில்தார் பழனிவேல் மற்றும் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் மாணவ மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது 23 விரிவுரையாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி 15 நாட்களுக்குள் விரிவுரையாளர்கள் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ள படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு விட்டு வகுப்புகளுக்கு சென்றனர். இச்சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Karambakudy Government College ,
× RELATED குடோனில் பதுக்கப்பட்ட 4.38 லட்சம்...