பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டினால் உச்ச நீதிமன்ற வழக்கை தீவிரப்படுத்துவோம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர், செப்.29: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டினால் உச்ச நீதிமன்ற வழக்கை தீவிரப்படுத்துவோம் என அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் கடந்த வருடம் பெய்த பலத்த மழையால் பொன்னை ஆற்றுப்பாலம் சேதமடைந்தது. அப்போது புதிய மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு ₹40 கோடியில் கட்டப்படும் மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதில் துணி நூல் மற்றும் கைத்தறி தொழில் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற எம்பி ஜெகத்ரட்சகன், வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைக்கட்டுவதை தடுக்க ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அவ்வாறு ஆந்திர அரசு அணை கட்டினால் வழக்கை நாங்கள் தீவிரப்படுத்துவோம். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகள் அணைகள், மதகுகள் பராமரிக்கப்படவில்லை. இதனால் தான் கிருஷ்ணகிரியில் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறியது. பரம்பி குளத்திலும் மதகுகளின் கதவுகள் உடைந்து தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. அதனை தற்போது சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் அதனை திரும்பி கூட பார்க்கவில்லை. தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது குறித்து, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் அஸ்வினிகுமார், திமுக பயங்கரவாதத்திற்கு துணை போவதாக கூறுகிறார். அவர் விவரம் தெரியாத மந்திரி. நாங்கள் எந்த காலத்திலும் பயங்கரவாதத்திற்கு துணை போனதில்லை. திமுக பயங்கரவாதத்திற்கு எப்போதும் துணை போகாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: