×

கிராமங்களில் அடிப்படை வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது: மாங்குடி எம்எல்ஏ பேச்சு

காரைக்குடி, செப்.29: கிராமப்புறங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது என எம்எல்ஏ மாங்குடி தெரிவித்தார். காரைக்குடி அருகே சங்கராபுரம் நெசவாளர்காலனி பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி துவக்கவிழா நடந்தது. மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். எம்எல்ஏ மாங்குடி பணியை துவக்கிவைத்து பேசுகையில், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமப்புறங்களின் வளர்ச்சியும் தனிகவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர், டிரான்ஸ்பார்மர் அமைத்தல் உள்பட பல்வேறு வசதிகள் உடனடியாக செய்யப்பட்டு வருகிறது.

தவிர தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மக்கள் தெரிவித்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு அந்தந்த பகுதிகளின் தேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு பகுதிக்கும் அடிப்படை வளர்ச்சிக்கு தேவையான பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. நெசவாளர் பகுதியை பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி நிதி மற்றும் ஒன்றிய நிதி, சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் 80 சதவீத பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 10 வருடங்களாக எந்த வித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்த இப்பகுதியில் ரூ.1 கோடிக்கு மேல் பணிகள் நடந்துள்ளது.

மண்சாலைகள் அனைத்தும் தார்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. கிராமங்கள் தன்னிறைவு பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம், திமுக நிர்வாகி சில்வர்ஸ்டர், கவுன்சிலர் செங்கோல், சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் மாஸ்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mangudi ,
× RELATED புதுக்கோட்டைஅருகே மாங்குடி என்பவரை...