×

உலக அளவில் ஆண்டுக்கு 7 லட்சம் பேர் தற்கொலை: துணைவேந்தர் ஜி.ரவி பேச்சு

காரைக்குடி, செப்.29: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சமூகவியல் துறை சார்பில் தற்கொலை தடுப்பு வாரம் அனுசரிக்கப்பட்டது. சமூகவியல் துறை பேராசிரியர் வேலுச்சாமி வரவேற்றார். துணைவேந்தர் ஜி.ரவி தலைமை வகித்து பேசுகையில், உலக சுகாதார புள்ளி விவரங்களின்படி உலகவில் ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களின் மரணத்திற்கான நான்காவது காரணமாக தற்கொலை இருக்கிறது. 77 சதவீத தற்கொலைகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் நிகழ்ந்துள்ளது. நிதி சிக்கல்கள், உறவு முறிவுகள், நாள்பட்ட நோய் மற்றும் வலி போன்றவைகளால் ஏற்படும் மனஅழுத்தங்களை சமாளிக்கும் திறன் குறைவதால் நெருக்கடியான தருணங்களில் தற்கொலை நிகழ்வது கண்டறியப்பட்டுள்ளது.

2021 நிலவரப்படி இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் நடக்கும் மாநிலமாக மகாராஷ்டிராவும், அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மற்றும் மத்தியபிரதேச மாநிலங்கள் உள்ளன. தற்கொலை என்பது வளர்ந்து வரும் சமூகப் பிரச்சனையாக உள்ளது. ஒவ்வொரு சமூகப்பணி மாணவரும் தற்கொலையைத் தடுக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். கலைப்புல முதன்மையர் பேராசிரியர் தனுஷ்கோடி, ஆத்மா மருத்துவமனை சமூகவியல் துறை தலைவர் பிரகதீஸ்வரன், உளவியல் ஆலோசகர் லீமாதாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vice Chancellor ,G. Ravi ,
× RELATED இந்திய பொருளாதாரத்தில் கால்நடை...