×

ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

சிவகங்கை, செப்.29: சிவகங்கையில் மதுரை, தொண்டி சாலை ரயில்வே கிராசிங்கில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலை போடப்படாமல் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கையில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை குறுக்கே ரயில் பாதை கிராசிங் உள்ளது. இதில் தென்னக ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைத்துறை இணைந்து ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2013ம் ஆண்டு தொடங்கி நடந்து வந்தது. பணிகள் முடிவடைந்து 2016ம் ஆண்டு செப்டம்பரில் பாலத்தில் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. பாலத்தின் கீழ் பகுதியில் சுரங்கப்பாதை உள்ளது.

ரயில்வே கிராசிங் அருகே உள்ள குடியிருப்புகளை சேர்ந்தவர்கள், ரயில்வே ஸ்டேசன், நகராட்சி அலுவலகம் செல்லும் டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள், பொதுமக்கள் செல்ல சுரங்கப்பாதை வழி மட்டுமே உள்ளது. இந்நிலையில் பாலம் அமைக்கும் முன் ஏற்கனவே இருந்த தார்ச்சாலையில் பில்லர் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் போது கிடைக்கும் கல் மற்றும் மணலை கொட்டி சாலையின் இரு புறமும் உள்ள மண் பாதையில் வாகனங்கள் சென்று வந்தன. தற்போதும் அந்த மண் சாலையையே பாலத்தின் கீழ் ரயில்வே தண்டவாளம் வரை செல்பவர்கள் மற்றும் சுரங்கப்பாதை வழி சென்று ஆயுதப்படை குடியிருப்பு, அரசு பஸ் டிப்போ வழி செல்பவர்கள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

சாலையே இல்லாமல் மண் மண்டிக்கிடக்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு கி.மீ தூரத்திற்கு இதுபோல் போக்குவரத்திற்கு பயனற்ற வகையில் சாலை உள்ளது. நீண்ட தூரத்திற்கு ஒரு அடி ஆழத்தில் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளன. அதிகப்படியான தூசி கிளம்புகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. மழை பெய்தால் இப்பகுதியில் செல்ல முடியாமல் கடும் அவதி ஏற்படுகிறது.

பொதுமக்கள் கூறுகையில், பாலத்தின் கீழ் பகுதியில் சாலை அமைக்கும் பணியே நடக்காமல் கடந்த ஐந்து ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாலம் கட்டுமான பணிகள் முடிந்தவுடன் இப்பணிகளும் செய்திருக்க வேண்டும். இதுபோல் பாலத்தின் தொடக்கம் மற்றும் முடியும் இடத்தில் ரவுண்டானா அமைப்பது அல்லது தடுப்புகள் ஏற்படுத்தும் பணிகள் நடக்கவில்லை. இதனால் விபத்துகள் நடந்து வருகின்றன. சாலை, ரவுண்டானா அமைக்கும் பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு