புஷ்பலதா கல்வி குழுமம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.7.65 லட்சத்தில் புதிய பூங்கா கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்

நெல்லை, செப். 29: நெல்லையில் புஷ்பலதா கல்விக் குழுமம் சார்பில் ரூ.7.65 லட்சத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட புதிய பூங்காவை கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்து பார்வையிட்டார்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பழைய செஞ்சிலுவை சங்க கட்டிட வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள்  நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளித்  திறனுடைய  குழந்தைகள் விளையாடுவதற்காக புதிய பூங்காவை கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.  நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக மாவட்டத்தின் நிர்வாகத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதார வள மையம் பாளையங்கோட்டையில் உள்ள  பழைய செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் மன வளர்ச்சி குன்றியோருக்கு 0-6 வயதுக்குட்பட்டோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம், 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி மையம்,  ரெடிங்டன் பவுண்டேசன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி வழங்குவதற்கான கணினி பயிற்சி  மற்றும் தகவல் மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கு வரும் குழந்தைகள் விளையாடவும், உடல் ரீதியான பயிற்சி பெறவும், விளையாட்டு சாதனங்களுடன் பயிற்சி அளிக்க புதிய பூங்கா  புஸ்பலதா கல்வி நிறுவனம் சார்பில் ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டில்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு பூங்காவில்  சுற்று வட்டார பகுதியில் உள்ள 5 வயது முதல் 14 வயது வரையிலான மாற்றுத்திறனுடைய  குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளருடன் வந்து விளையாடலாம். இந்த பூங்காவில் விளையாடுவதன் மூலம் மாற்றுத்திறன் குழந்தைகள் உடல் தசைகள் சிறு, சிறு செயல்பாடுகள் கொடுப்பதால் அவர்களுக்கு உற்சாகமும், உடல் ரீதியான மாற்றம் கிடைக்கிறது. இவ்வாறு கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார். விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், புஷ்பலதா கல்விக் குழும தாளாளர் புஷ்பலதா பூரணன், ரெடிங்டன் பவுண்டேசன், புனித அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி தலைமையாசிரியர், அன்னை ஜோதி சேவா டிரஸ்ட் செயலர் செல்வகுமார், நாங்குநேரி செஞ்சிலுவை சங்க தலைவர் சபேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: