குடிநீர் பற்றாக்குறை குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பு

சேலம், செப். 29: சேலம் மாநகர பகுதியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை குறித்து, குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார். சேலம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வந்த, தமிழக முதல்வரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து உறுப்பினர்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். அஸ்தம்பட்டி மண்டல குழுத்தலைவர் உமாராணி பேசுகையில், ‘‘வரட்டாறு ஓடையில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு மழைநீர் மட்டுமின்றி, பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஓடையில் வீசப்படுவதால் அடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. பல இடங்களில் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி ஓடைகளை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும்,’’ என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் (அதிமுக) யாதவமூர்த்தி பேசுகையில், ‘‘மாநகராட்சியில் ஏற்கனவே நிதி பற்றாக்குறை உள்ளது. ஆனால் குடிநீர் திட்டங்களை விரிவுப்படுத்த ₹416 கோடி வழங்கப்படும் என தீர்மானத்தில் உள்ளது. இதற்கான நிதி எங்கிருந்து கிடைக்கும், எப்படி செயல்படுத்த போகிறீர்கள், மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை வெளியிட வேண்டும். அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலங்களுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர்  வினியோகிக்கப்படுகிறது,’’ என்றார். இதற்கு மாநகராட்சி பொறியாளர் ரவி விளக்கம் அளித்து பேசுகையில், `‘தனியார் பங்களிப்பு நிதியின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. மாநகராட்சி நிதியில் இருந்து ஒரு ரூபாய்கூட செலவிடப்படாது. அதேபோல், பொதுமக்களிடம் வசூல் செய்ய மாட்டோம்,’’ என்றார்.

சூரமங்கலம் மண்டல குழு தலைவர் கலையமுதன் பேசுகையில்,‘‘கடந்த கால திமுக ஆட்சிகளை பற்றி குறைகூற யாருக்கும் தகுதியில்லை. அதிகாரிகளின் செயல்பாடுதான் மெத்தனமாக உள்ளது. மாநகராட்சிக்கு 150 எம்எல்டி தண்ணீர் வருவதாக சொல்கின்றனர். இந்த தண்ணீர் முழுமையாக வந்தாலே, தினமும் குடிநீர் வினியோகம் போக மீதமாகத் தான் இருக்கும். எனவே 150 எம்எல்டி தண்ணீரும் முழுமையாக வருகிறதா, முறையாக வருகிறதா என ஆய்வு செய்யவேண்டும், என்றார். தொடர்ந்து குடிநீர் வினியோகம் தொடர்பாக திமுக, அதிமுக உறுப்பினர்கள் மாறிமாறி குற்றம்சாட்டி பேசியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்டு மேயர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘குடிநீர் பற்றாக்குறை குறித்து ஆய்வு செய்ய மண்டலக்குழு தலைவர் கலையமுதன் தலைமையில், அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்,’’ என்றார். தொடர்ந்து 44வது வார்டு கவுன்சிலர் இமயவர்மன் பேசுகையில், ‘‘கடந்த 2018-2022 ஆண்டுகளில், தூய்மை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் பெற்ற கடனுக்கு, அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ₹8 கோடி, அவர்களது கடன் கணக்கிற்கு சேரவில்லை.’’ என்றார்.  கூட்டத்தில், துணை மேயர் சாரதாதேவி, மாநகர பொறியாளர் ரவி, மண்டலக்குழு தலைவர்கள் தனசேகரன், அசோகன் மற்றும் நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: