பெட்ரோல் பங்கில் விற்பனை நிறுத்தம்

கெங்கவல்லி, செப்.29:  வீரகனூரில் உரிமம் பெறாமல் இயங்கி வந்த பெட்ரோல் பங்கில் மாவட்ட உணவு கலப்பட தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்து விற்பனையை தடுத்து நிறுத்தினர். சேலம் மாவட்டம் வீரகனூரில் இருந்து தலைவாசல் செல்லும் நெடுஞ்சாலையில் வீரகனூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிச் செல்லும் வாகனங்கள் பழுதடைந்து வருவதாக புகார் எழுந்தது. கலப்பட பெட்ரோல் விற்பனையே வாகனங்கள் பழுதுக்கு காரணம் என குற்றம்சாட்டினர். இதையடுத்து, சேலம் மாவட்ட உணவு கலப்பட தடுப்பு டிஎஸ்பி விஜயகுமார் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையிலான குழுவினர் நேற்று பெட்ரோல் பங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.  இதில், உரிய அனுமதியின்றி பெட்ரோல் பங்க் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக விற்பனையை நிறுத்த அறிவுறுத்தி, மேல் நடவடிக்கை எடுப்பதற்காக அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். கடந்த 2020ம் ஆண்டு வரைக்கும் உரிமம் பெறப்பட்டுள்ள நிலையில், உரிமையாளர் இறந்து விட்டபோதிலும் அவரது மகன் தொடர்ந்து சட்ட விரோதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: