திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அதிரடி ஆய்வு

திண்டுக்கல், செப். 29:திண்டுக்கல்  மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சி துறை, பேரூராட்சிகள் மூலம்  மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் விசாகன்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலைத்துறை சார்பில்  திண்டுக்கல் சிலுவத்தூர் ரோட்டில் ரூ.24.5 கோடி மதிப்பீட்டில் ரயில்வே  மேம்பாலம், திண்டுக்கல்- குஜிலியம்பாறை ரோட்டில் ரூ.16.18 கோடி  மதிப்பீட்டில் ரயில்வே கீழ்பாலம் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை  கலெக்டர் விசாகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது  நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் சிலுவத்துார் ரோடு ரயில்வே மேம்பாலம் 6  ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை கூடுதல்  பணியாளர்களை கொண்டு இன்னும் ஒரு மாத காலத்தில் முழுமையாக முடிக்க நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும். அதேபோல் திண்டுக்கல்- குஜிலியம்பாறை ரோட்டில் உள்ள  ரயில்வே கீழ்ப்பாலம் 50 சதவீதம் பணிகளே முடிக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள  பணிகளை கூடுதல் பணியாளர்களை நியமித்து இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து,  மக்களின் பயன்பாட்டிற்கு இரு பாலங்களையும் கொண்டு வர துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து கலெக்டர், ஊரக  வளர்ச்சி முகமை சார்பில் வடமதுரை ஒன்றியம், வேலுவார்கோட்டை ஊராட்சி,  வெள்ளக்கொம்மன் கோட்டை கிராமத்தில் உள்ள நல்லழகி தெப்பக்குளத்தில் ரூ.2.64  லட்சம் மதிப்பீட்டில் துார்வாரும் பணிகள்,

ரூ.3.6 கோடி மதிப்பீட்டில் வடமதுரை ஒன்றியத்திற்கு புதிய அலுவலகம் கட்டுமான பணிகள், அய்யலூர் பேரூராட்சி, பூனைக்கரடு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை வளமீட்பு பூங்காவில்  மண்புழு தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், டிஆர்ஓ லதா, நெடுஞ்சாலை துறை  கோட்ட பொறியாளர் பிரசன்ன வெங்கடேஷன், உதவிப்பொறியாளர் தணுபிரியா, வடமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவீந்திரன், வசந்தா, அய்யலூர் பேரூராட்சி  தலைவர் கருப்பன், செயல் அலுவலர் பாண்டீஸ்வரி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: