பொரி தயாரிக்கும் பணி தீவிரம்

தர்மபுரி, செப்.29: ஆயுத பூஜை பண்டிகைக்கு இன்னும் 5 நாட்கள் உள் நிலையில், தர்மபுரியில் பொரி தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வரும் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில், புத்தகங்கள், வாகனம், இயந்திரம், கருவி, ஆயுதங்களை வைத்து பூஜிக்கின்றனர். பூஜையில் பொரி முக்கிய பொருளாகக் இடம் பெற்றிருக்கும். பொரி தயாரிப்பில் உற்பத்தியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில், பொரி விற்பனை சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து, தர்மபுரி பொரி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் 5 இடங்களில் மட்டுமே, பெரிய அளவில் பொரி தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதுதவிர, சிறிய அளவில் 10க்கும் மேற்பட்டோர் பொரி உற்பத்தி செய்து, மாவட்ட அளவில் விற்பனை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில், 6 (180 நாள் பயிர்) மாதத்தில் விளையும் நெல் ரகங்களை பயன்படுத்தி, பொரி உற்பத்தி செய்து, குறைந்த விலைக்கு விற்றோம். தற்போது, தமிழகத்தில், ஆறு மாத காலப்பயிர் நடவு குறைந்து விட்டது. 90 முதல், 110 நாள் பயிர்களை நடவு செய்வதால், இந்த நெல் ரகங்களில் பொரி தயாரித்தால், கருகி விடும் அல்லது உடைந்து, பக்குவம் வராது. கர்நாடக மாநிலம் தாவண்கரே, மாண்டியா, மைசூரு போன்ற பகுதிகளில் இருந்து, மொத்தமாக நெல் கொள்முதல் செய்து, பொரி தயாரிக்கிறோம். கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பொரி சப்ளை செய்கிறோம். 8 கிலோ கொண்ட ஒரு மூட்டை பொரியை, ₹470 முதல் ₹500 வரை விற்கிறோம். கடந்தாண்டை விட, இந்தாண்டு, மூட்டைக்கு 50 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. நெல், அரிசி உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்ந்தால், பொரி விலையும் உயர்ந்துள்ளது. ஒருபடி பொரி ₹10 லிருந்து ₹15 ஆக விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நீங்கலாக, பிற காலத்தில் பானிபூரி, மிக்சர் உட்பட பல உணவுப் பொருட்களுடன் கலக்கவும், கோயில், வீடு, கடைகளில் தினசரி பூஜையில் வைக்கவும், பொரியை வாங்கிச் செல்கின்றனர். கையால் தயாரிக்கப்படும் பொரி வகையே, உடல் நலத்திற்கு ஏற்றது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: