×

திட்டக்குடி அருகே வீட்டு சுவற்றில் துளையிட்டு பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொள்ளை

திட்டக்குடி, செப். 29: திட்டக்குடி அருகே வீட்டின் பின்பக்க சுவற்றில் துளை போட்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பள்ளகாலிங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து (45). இவர் குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். மேலும் இவர் சிங்கப்பூரில் கன்சல்டிங் கம்பெனி வைத்து நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பட்டூர் கிராமத்தில் நெடுஞ்சாலை அருகே பச்சமுத்துவுக்கு ஒரு மெத்தை வீடும் உள்ளது. அவ்வப்போது ஊருக்கு வரும்போது இந்த வீட்டில் தங்குவது வழக்கம். இந்த வீட்டை வேலையாட்கள் பராமரித்து வருகின்றனர்.

இந்த வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் அவ்வப்போது அவரது செல்போனில் சிங்கப்பூரில் இருந்தவாறு அன்றாட நிகழ்வுகளை பார்ப்பது வழக்கம். இந்நிலையில் அவரது வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா வேலை செய்யாமல் இருந்துள்ளது. அவரது மேலாளர் ரமேசை தொடர்பு கொண்டு வீட்டில் சிசிடிவி கேமரா செயல்படாமல் உள்ளது, அது என்னவென்று பார் என்று கூறியுள்ளார். ரமேஷ் சிசிடிவி கேமரா பழுது நீக்குபவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது கேமரா சேதம் அடைந்தும் வீட்டின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிங்கப்பூரில் உள்ள பச்சமுத்துவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 தொடர்ந்து ஆவினங்குடி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திட்டக்குடி டிஎஸ்பி காவியா மற்றும் ஆவினங்குடி போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டிலிருந்த வெளிநாட்டு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நகை, பணமும் கொள்ளை போயிருக்கலாம் என கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளனர். வீட்டில் தரைத்தளத்தின் கீழே ரகசிய லாக்கர் இருக்குமோ என நினைத்து வீட்டின் தரையில் போடப்பட்டிருந்த டைல்ஸ் கல்லை சேதப்படுத்தி உள்ளனர். மேலும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டிருந்த ஹார்ட் டிஸ்கையும் எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் கொள்ளை போன பொருட்கள், என்னென்ன என வீட்டின் உரிமையாளர் வந்தால் தான் தெரியும். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் சென்று, தடயங்களை சேகரித்தனர். கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து சிறுது தூரம் ஓடி நின்றது. அங்கு சென்று போலீசார் பார்த்தனர். அப்போது, மர்மநபர்கள் கொள்ளையடிக்க பயன்படுத்தி 2 முகமூடிகள், வீட்டை துளையிட பயன்படுத்திய கடப்பாரை போன்றவை கிடந்துள்ளது. இதையடுத்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 திட்டக்குடி- விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலை அருகில் உள்ள வீட்டில் சுவற்றில் மர்ம நபர்கள் துளையிட்டு உள்ளே புகுந்து நகை, பணம், பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Thitakkudi ,
× RELATED போதை வாலிபர் மர்ம சாவு; போலீஸ் மீது...