×

பொது இடம், முக்கிய சந்திப்புகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க கூடாது


நெல்லிக்குப்பம் செப். 29:  பொதுஇடங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர், விளம்பர பதாகைகளை வைக்க கூடாது என ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.         
 நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் திருமண மண்டபங்கள் மற்றும் பொது இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத்தலைவர் கிரிஜா, நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, துப்புரவு அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னில வகித்தனர். நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் வாசு வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், திமுக நகர செயலாளர் மணிவண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் திருமாறன், வர்த்தக சங்க நிர்வாகிகள், திருமண மண்டப உரிமையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில் சேர்மன் ஜெயந்தி பேசியதாவது, உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது. திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சி மற்றும் அரசியல் பிரமுகர்களின் கூட்டங்கள் நடைபெறும் போதும், பொது இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க கூடாது என நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. எனவே பொது இடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் முன் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

 மேலும் சுப நிகழ்ச்சியின் போது திருமண மண்டபங்களின் நுழைவு வாயில் முன் டிஜிட்டல் பேனர்கள் வைக்க வேண்டும் என்றால் காவல் துறையினரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். பின்னர் நகராட்சி அலுவலகத்தில் அனுமதி கட்டணம் செலுத்தி உரிய விண்ணப்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் பாதுகாப்பான முறையில் வைக்க அனுமதி வழங்கப்படும்.  
 அதேபோல் ஆலைரோடு மும்மனை சந்திப்பில் விபத்துகளை தவிர்க்கும் வகையில், பொதுமக்களுக்கும், வர்த்தக வியாபாரிகளுக்கும் இடையூறாக எவ்வித டிஜிட்டல் பேனர்களும், விளம்பர பதாகைகளும் வைக்கக்கூடாது. இதை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சேர்மன் ஜெயந்தி எச்சரித்தார்.  நிகழ்ச்சியில் நகராட்சி கட்டிட ஆய்வாளர் ஜின்னா, உதவியாளர் நாராயணசாமி, இளநிலை எழுத்தர் பாபு, கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம், பார்க் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை