சென்னை புறநகரில் 28 சட்டமன்ற தொகுதிகளில் நிறுவப்பட்ட 2,488 வளைய சுற்றுத்தர அமைப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: எரிசக்தி துறை சார்பில் சென்னையில் 28 சட்டமன்ற தொகுதிகளில் ரூ.360.63 கோடி மதிப்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 2,488 வளைய சுற்றுத்தர அமைப்புகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, சேப்பாக்கம், எழும்பூர், துறைமுகம், கொளத்தூர், மாதவரம், மதுரவாயல், மயிலாப்பூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், சைதாப்பேட்டை, தி.நகர், திரு.வி.க.நகர், திருவெற்றியூர், ஆயிரம்விளக்கு, வில்லிவாக்கம், விருகம்பாக்கம், ஆலந்தூர், பூந்தமல்லி, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி, பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய 28 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் ரூ.787 கோடி மதிப்பீட்டில் விநியோக மின்மாற்றிகள் மற்றும் மின்வழி பாதைகளுக்கு புதியதாக 5,692 வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றுள், ஏற்கனவே 216 வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் ரூ.31.31 கோடி செலவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து கொளத்தூர், சேப்பாக்கம், சைதாப்பேட்டை, துறைமுகம், ஆலந்தூர், ஆவடி, அண்ணாநகர், எழும்பூர், மயிலாப்பூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், தி.நகர், திரு.வி.க.நகர், ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி, அம்பத்தூர், மாதவரம், மதுரவாயல், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர், பூந்தமல்லி, பெரும்புதூர், ஆகிய 28 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 2,488 வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் ரூ.360.63 கோடி செலவில் நிறுவும் பணிகள் முடிவுற்று நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

இந்த வளைய சுற்றுத்தர கருவி அமைப்பதன் மூலம், மழைக்காலங்களில் ஏற்படும் மின்விபத்தினை தவிர்க்க முடியும்.  மேலும், ஒவ்வொரு வளைய சுற்றுத்தர கருவியும் குறைந்தபட்சம் இரு மின்வழி பாதைகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால், ஏதேனும் ஒரு மின்பாதையில் பழுது ஏற்பட்டாலும் மற்றொரு மின்வழி பாதையின் மூலம் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க முடியும். இதனால் பொதுமக்களுக்கு மின்தடையினால் ஏற்படும் அசவுகரியங்கள் வெகுவாக குறைக்கப்படும். இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மின் வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் அனைத்தும் எஸ்சிஏடிஏ சிஸ்டம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால் தலைமையிடத்தில் இருந்தே இந்த கருவிகளை இயக்க முடியும்.

இதனால் மின்சாரம் எடுத்துச் செல்லும் கேபிள்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டாலும் கூட அதனை உடனே கண்டறிந்து துரிதமாக சரி செய்யவும் முடியும். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்பி, எழிலன் எம்எல்ஏ, துணை மேயர் மகேஷ்குமார்,  நிலைக்குழு தலைவர் சிற்றரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: