ஆர்.கே.நகர் பகுதியில் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக எதுவும் செய்யாததால் அடிப்படை வசதிகள் முடங்கியுள்ளது: துணை மேயர் மகேஷ்குமார் குற்றச்சாட்டு

தண்டையார்பேட்டை: கடந்த ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளாக ஆர்.கே.நகரில் எந்த அடிப்படை வசதிகளுமே செய்யாததால்தான் பின்தங்கிய பகுதியாக உள்ளது என மழைநீர் கால்வாய் பணிகளை நேரில் ஆய்வு செய்த பின் துணைமேயர் மகேஷ்குமார் பரபரப்பு குற்றம் சாட்டினார். தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், முதல்வர் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி தயாரிக்கும் கூடத்தையும் துணை மேயர் மகேஷ்குமார் நேற்று காலை ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் காலை சிற்றுண்டி உணவு தயாரிப்பு கூடத்தில் மகேஷ்குமார் ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து, வியாசர்பாடி உதயசூரியன் நகரில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கினார். பின்னர், தண்டையார்பேட்டை 42வது வார்டில் நடைபெறும் மழைநீர் கால்வாய் பணிகளை ஆய்வு செய்தார். மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், கவுன்சிலர்கள் டில்லிபாபு, ரேணுகா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், திமுகவினர் கலந்துகொண்டனர். பின்னர், துணை மேயர் மகேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ரெட்டை குழலி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் எந்த அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து நேரடியாக ஆய்வு செய்தேன்.

ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும் மழைநீர் வடிகால் பணிகள் 18 கிலோ மீட்டர் சுற்றளவில் நடந்துகொண்டு இருக்கிறது. கடந்த ஆட்சி காலத்தில் பத்தாண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளும் ஆர்.கே.நகர் பகுதியில செய்து கொடுக்காததால் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. அதனால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் ஆணையிட்டு உள்ளார்.

ஆர்.கே. நகர் பகுதியில் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து பணிகளை முடித்திட வேண்டும். கடந்த மழைக்காலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர் முழுவதும் நடந்து சென்று வெள்ள காட்சிகளை ஆய்வு செய்ததன் விளைவாக அனைத்து பகுதிகளும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மழைநீர் கால்வாய்கள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக எங்கும் மழைநீர் தேங்காத அளவிற்கு பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். அக்டோபர் இறுதிக்குள் மெட்ரோ ரயில் செல்கின்ற பாதைகள், தமிழ்நாடு மின்சார வாரிய பணிகளின் பாதைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். சென்னையில் 175 கிலோ மீட்டர் அளவில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளில் தற்போது 128 கிலோ மீட்டர் நடந்துள்ளது. மீதமுள்ள 45 கிலோ மீட்டர் மட்டுமே எஞ்சி இருப்பதால் அடுத்த மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவுபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: