பொறுப்புகளை உணர்ந்து அதிகாரிகள் திறம்பட செயல்பட வேண்டும்

தூத்துக்குடி, செப். 28: பொறுப்புகளை உணர்ந்து அதிகாரிகள் அனைவரும் திறம்பட செயல்பட வேண்டும் என தூத்துக்குடியில் நடந்த வளர்ச்சி திட்ட கூட்டத்தில் கனிமொழி எம்பி அறிவுறுத்தினார். தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கனிமொழி எம்பி தலைமை வகித்து பேசுகையில், ‘‘பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் வறுமை கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதில் ஏழை மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இத்திட்டத்தில் செயல்படுத்த வேண்டிய பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். தூய்மை பாரத இயக்கத்தின்கீழ் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற ஊராட்சி என்ற நிலையில் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் வீடுகளுக்கு தனிநபர் கழிப்பறை கட்டிக்கொடுக்கப்படுகிறது. எனவே அனைத்து ஊராட்சிகளிலும் தனிநபர் கழிப்பறைகள் அமைந்த ஊராட்சியாகவும், சுகாதார ஊராட்சியாகவும் மாற்றிட ஊராட்சி தலைவர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என குப்பைகள் பிரித்து சேகரிக்கப்படுகிறது. இதில், மக்கும் குப்பைகளானது நுண்ணுயிர் குழி மையத்தில் சேகரித்து அதன் மூலம் இயற்கை உரம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பொதுஇடங்களில் கொட்டப்படும் குப்பைகளையும் இதுபோன்று தூய்மை பணியாளர்கள் மூலமாக  சேகரித்து இதேபோல் இயற்கை உரம் தயார் செய்வதோடு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அந்த இயற்கை உரத்தை மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைப்பது, கழிவுநீரை உறிஞ்சி குழாய் மூலமாக மறுசுழற்சி செய்து தோட்டங்களுக்கு உபயோகப்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, அந்தியோதயா அன்னயோஜனா திட்டங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,  மலை பகுதிகளில் வசிப்போரில் தகுதியானவர்களை கண்டறிந்து இலவச எரிவாயு இணைப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.

வளர்ச்சி திட்டத்தின் செயல்பாடுகள்  குறித்த  விவரங்களை கனிமொழி எம்பி கேட்டபோது, அதிகாரிகளில் சிலர் சரியான   முறையில் பதிலளிக்கவில்லையாம். புள்ளிவிவரங்களும்  திருப்திகரமாக இல்லை.  இதனால் அதிருப்தியடைந்த கனிமொழி எம்பி, ‘‘எல்லோருக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. அதை  அதிகாரிகள் உணர்ந்து  கொள்ள வேண்டும். எந்த பணி முக்கியமானது என்பதை  கண்டறிந்து  அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடங்களை உடனடியாக   பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வித்துறையில் நமக்கு என்ன என்ன   பொறுப்புகள் என்ன என்பதை உணரவேண்டும். கொஞ்சம் கஷ்டப்பட்டும், இஷ்டப்பட்டும் அந்தந்த   வேலைகளை பொறுப்புணர்வுடன் செய்தால்தான் அது அடுத்த தலைமுறைக்கு மிகப்பெரிய   விஷயமாக மாறுவதோடு, எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, அதிகாரிகள்  அனைவரும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும். குறிப்பாக அரசின்  நோக்கம் அறிந்து திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய்ந்து திட்டம்   முழுமையாக வெற்றியடையும் வகையில் அர்ப்பணிப்புடன் திட்டமிட்டு தேவைப்படும்  இடத்தில் தேவையான நிதியை துரிதமாக பயன்படுத்தி செயல்படுத்த வேண்டும்.   திட்டப்பணிகளை தாமதமின்றி விரைந்து முடிக்கவேண்டும்’’ என்றார். கூட்டத்திற்கு கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் சாரு, எம்எல்ஏக்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், டிஆர்ஓ கண்ணபிரான் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: