×

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு பெண் ஏட்டுவிடம் 4ம் நாளாக விசாரணை

மதுரை, செப். 28: சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் பெண் ஏட்டுவிடம் 4ம் நாளாக குறுக்கு விசாரணை நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2 ஆண்டுக்கு முன் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் அப்போதைய இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சிபிஐ தரப்பில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வேகமடைந்துள்ளது. சம்பவத்தின்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றிய ஏட்டு பியூலா செல்வகுமாரி, ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதைத் தொடர்ந்து அவரிடம் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி என்.நாகலட்சுமி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக கைதான 9 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் தரப்பில் ஏட்டு பியூலாவிடம் நான்காம் நாளாக நேற்றும் குறுக்கு விசாரணை நடந்தது. அதில், ‘‘சம்பவம் நடந்தபோது காவல் நிலையத்தில் இருந்ததாக கூறும் நீங்கள், ஏன் அது தொடர்பாக புகார் அளிக்கவில்லை’’ என கேட்டனர். இதற்கு அவர், ‘‘உயரதிகாரிகளின் முறையான தகவலின்றி எதுவும் செய்ய முடியாது’ என்றார். இதையடுத்து விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Satankulam ,Attu ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்