உளுந்தூர்பேட்டை அருகே பாமாயில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

உளுந்தூர்பேட்டை,  செப். 28: சென்னை மணலியில் இருந்து 40 டன் பாமாயில் ஏற்றிக்கொண்டு ஒரு  டேங்கர் லாரி சேலத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை  திருவாரூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றார். இந்த லாரி  நேற்று காலை உளுந்தூர்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி புறவழிச்சாலையில்  சென்று கொண்டு இருந்த போது திடீரென நிலை தடுமாறி லாரி சாலை ஓர பள்ளத்தில்  தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியை ஓட்டிச் சென்ற  செந்தில்குமார் படுகாயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரி கவிழந்து விபத்து  ஏற்பட்டதால் டேங்கரில் உடைப்பு ஏற்பட்டு பாமாயில் லாரியில் இருந்து  வெளியேறியது. இதனை இந்த பகுதியை சேர்ந்தவர்கள் குடங்கள் மற்றும் கேன்களில்  பிடித்து சென்றனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  சென்ற எலவனாசூர்கோட்டை காவல்நிலைய போலீசார் பாமாயில் பிடித்தவர்களை விரட்டி  விட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் நெடுஞ்சாலை ரோந்து  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இரண்டு கிரேன்கள்  மூலம் கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரி அங்கிருந்து  அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் டேங்கர் லாரியில் இருந்து சுமார் 2  டன் அளவிற்கு பாமாயில் வெளியேறி வீணாகி இருக்கலாம் என தெரிகிறது. இந்த  விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து  விசாரணை செய்து வருகிறார்.

Related Stories: