×

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 206 மனுக்கள் பெறப்பட்டது

ஈரோடு,செப்.28:  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று  நடைபெற்றது. கலெக்டர் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமை  வகித்தார். இதில், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட  உதவித் தொகைகள் கேட்டும், வீட்டுமனைப் பட்டா, கல்விக் கடன், அடிப்படை வசதி  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 206 மனுக்கள் வரப்  பெற்றன. மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி  சந்திரா, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை  மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சரின் தனிப்பிரிவு, அமைச்சர்களின் முகாம் மனுக்கள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில்  பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்  ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) குமரன், கலால் உதவி ஆணையர் சிவகுமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான்  மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

வாய்க்காலில் முறை வைத்து தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு: கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்: தற்போது கீழ்பவானி வாய்க்காலில் தினமும் 2,300 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கீழ்பவானி வடிநில கோட்டம் ஈரோடு 2ன் செயற்பொறியாளர், பாசன சங்கங்களை கலந்தாலோசிக்காமல்  செப்டம்பர் 26ம் தேதி முதல் முறை வைத்து தண்ணீர் வழங்க தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்படுத்தி உள்ளார்.

நெல் நடவுப் பணிகள் முடிவடையாத நிலையில், இவ்வாறு முறை வைத்து நீர் வழங்குவது தவறான முடிவாகும். எனவே, அனைத்து மதகுகளுக்கும் உரிய தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்:மொடக்குறிச்சி வட்டம், வடுகப்பட்டி, அறச்சலூர், அவல் பூந்துறை, நஞ்சை ஊத்துக்குளி கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வழங்கப்பட்ட சுமார் 1,000 ஆயிரம் ஏக்கர் நிலங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து சிலர் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, அந்த நிலங்களை மீட்டு, நிலம் இல்லாத பட்டியலின ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன்பாக அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் வடிவேல் ராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கோரிக்கை குறித்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஏலச்சீட்டு மோசடி: சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கினாங்ககோம்பை, அரசூர் , தட்டாம்புதூர் காலனியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: விவசாயத் தொழில் செய்து வரும் நாங்கள் அரசூர், ராஜவீதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் ஏலச்சீட்டுக்காக பணம் செலுத்தி வந்தோம். பல தவணைகளாக ரூ. 50 லட்சம் வரை செலுத்தியுள்ளோம். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக அந்த நபர் எங்களுக்கு சேர வேண்டிய சீட்டுத் தொகையை எங்களுக்கு தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். கூறியவாறு அவர் பணம் தராததால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.

எனவே, எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை அவரிடம் இருந்து மீட்டுத் தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரிக்கை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அந்தியூரில், அண்ணா மடுவு வரை சாலையின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், சாக்கடை கழிவு நீரையும் இணைத்துள்ளனர். இதனால் நீர் நிலைகள் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாக்கடை கழிவு நீர் செல்ல தனியாக வடிகால் அமைக்க வேண்டும். இதேபோல, வறட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் வரும் கால்வாய்களில் அந்தியூர், தவுட்டுப்பாளையம் பகுதி சாக்கடைக் கழிவு நீர் கலந்து மாசு ஏற்பட்டு வருகிறது. எனவே, இப்பகுதியிலும் சாக்கடை கழிவு நீருக்கு தனியாக வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு