×

திருவாரூர் மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 87,200 பயனாளிகள் பயனடைந்தனர்

திருவாரூர்,செப்.28: திருவாரூர் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 87 ஆயிரத்து 200 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடுதிட்ட பயனாளிகளுக்கு காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் அடையாள அட்டை மற்றும் இந்த காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மருத்துவமனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் ஆகியவைகளை வழங்கி கலெக்டர் பேசியதாவது, உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகள் கட்டணமில்லாமல் பொதுமக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் உயிர் காக்கும் உயர்கிச்சைக்கான முதலமைச்சரின் காப்பீடு திட்டம் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி துவங்கப்பட்டது.

அதன் பின்னர் மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட மொத்தம் ஆயிரத்து 90 சிகிச்சை முறைகளும், 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும், 52 பரிசோதனை முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் பச்சிளம் குழந்தை முதல் முதியோர் வரை அனைத்து வயதினருக்கும் பயன்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ஒரு குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ 5 லட்சம் வரை கட்டணம் இல்லாமல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் 87 ஆயிரத்து 200 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

இவர்களுக்காக ரூ 159 கோடியே 36 லட்சத்து 94 ஆயிரத்து 590 தமிழக அரசால் செலவிடப்பட்டுள்ளது.மேலும் மாவட்டத்தில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் குடவாசல், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், கூத்தாநல்லூர், நீடாமங்கலம் மற்றும் திருவாரூர் விஜயபுரம் மருத்துவமனை என மொத்தம் 9 அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் 5 தனியார் மருத்துவமனைகளிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து விபரம் அறிவதற்கும், குறைகளை தெரிவிப்பதற்கும் பொதுமக்கள் 24 மணி நேரமும் இயங்கிக்க கூடிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 18004253933 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செல்வகுமார், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட மாவட்ட திட்ட அலுவலர் லோகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Tiruvarur ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...