ஒரத்தநாட்டில் போலீஸ்காரரை தாக்கிய அமமுக பிரமுகர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தஞ்சாவூர், செப். 28: ஒரத்தநாடு கடைதெருவில் ஒரு தனியார் உணவு விடுதியில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி ஏற்பட்ட தகராறில் கண்ணந்தங்குடி மேலையூர் கார்த்திக் நகரைச் சேர்ந்தவர் சரவணன் (35) அமமுக பிரமுகர். இவரும், இவரது நண்பர்களும் அந்த உணவு விடுதியை அடித்து நொறுக்கி சூறையாடியதுடன் உணவு விடுதி உரிமையாளர் சாந்தி என்பவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரத்தநாடு போலீஸ்காரர் கோபிநாத், இதுகுறித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் கோபிநாத்தை தாக்கியுள்ளனர். ஓட்டல் உரிமையாளர் சாந்தி மற்றும் போலீஸ்காரர் கோபிநாத் புகாரின் ஒரத்தநாடு போலீஸார் தனித்தனியே 2 வழக்குகள் பதிவு செய்து தலைமறைவான சரவணனை 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு சரவணன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, சுமார் 23 நாட்கள் தலைமறைவாக இருந்து வந்த சரவணன் செப்டம்பர் 1-ம் தேதி ஒரத்தநாடு போலீசாரிடம் தனது வழக்கறிஞர் மூலம் சரணடைந்தார். பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, மாவட்ட எஸ்பி ரவளி ப்ரியா பரிந்துரையின் பேரிலும், ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் அமமுக பிரமுகர் சரவணனை மேலும் ஓராண்டு தடுப்புக் காவலில் வைத்திட மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள மாதுளம்பேட்டை, முத்துகிருஷ்ணன் நகரை சேர்ந்த தமிழ்செல்வன் (27), மாதுளம்பேட்டை, எம்.ஜிஆர் நகரை சேர்ந்த கார்த்திக் (31) ஆகிய 2 பேரும் கொலை முயற்சி வழக்கிற்காக குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.

Related Stories: