ஆன்லைன் லாட்டரி விற்றவர் கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேர் கைது

திருமயம்.செப்.28: அரிமளம் அருகே நடந்த கொலை வழக்கில் சிறுவன், பெண் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள தெக்கூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாங்குடி (42). இவர் மீது கே.புதுப்பட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காவல்நிலையத்தில் பல்வேறு குற்றத்திற்காக வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி தெக்கூரில் உள்ள அவரது தோட்டத்தில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனிடையே சம்பவ இடத்தில் சென்ற போலீசார் கைரேகை நிபுணர், மோப்பநாய் உதவியுடன் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இதனிடையே இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்க கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதே சமயம் செல்போன் டவர் உதவியுடன் கொலையாளிகள் தகவல்கள் போலீசார் சேகரித்து வந்தனர். இதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் தெக்கூரை சேர்ந்த மகாலிங்கம் மனைவி அன்னக்கொடி (39) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மகனுடன் சேர்ந்து கூலிப்படை ஏவி மாங்குடியை கொலை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் மேலும் கூறுகையில் மாங்குடிக்கும் அன்னக்கொடிக்கும் இடையே கடந்த ஆண்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாங்குடி அன்னக்கொடியின் மகன் செம்புலிங்கத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே தற்போது அன்னக்கொடி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி என்சிஓ காலனியில் வசித்து வரும் நிலையில் முன் விரோதம் காரணமாக நண்பர்களுடன் சேர்ந்து மாங்குடியை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார்.

இதன் காரணமாக கூலிப்படை உதவியுடன் மாங்குடி வீட்டு தோட்டத்தில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது சம்பந்தமாக அன்னக்கொடி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மகாலிங்கத்தின் 17 வயது மகன், காரைக்குடி கலையப்பன் நகர் மூக்குரனின் 18 வயது மகன், தெக்கூர் முருகன் மகன் சிவா (24), காரைக்குடி பர்மா காலனி செம்புலிங்கம் மகன் கருப்பையா(52) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படை குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: