வெற்றிக்கான இலக்கு சுயலாபத்தை தாண்டியதாக இருக்க வேண்டும்: திருச்சி என்ஐடி கல்லூரி விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

திருவெறும்பூர்,செப்.28: திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியில் முன்னாள் மாணவர் விருதுகள் மற்றும் இளம் சாதனையாளர் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு என்ஐடி கல்லூரி தலைவர் பாஸ்கர் பட் தலைமை வைத்தார். திருச்சி இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பவன்குமார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் மகாலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் என்ஐடி கல்லூரி இயக்குனர் அகிலா, முன்னாள் மாணவர்களான தமிழக நிதி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமெரிக்க ராணுவ தலைமை தகவல் தொடர்பு அலுவலர் டாக்டர் ராஜ் ஐயர், அமெரிக்க மருந்து கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி பிரிவு உதவி தலைவர் டாக்டர் ரங்கநாதன் கோத வர்த்தி, ஓய்வு பெற்ற அறிவியல் விஞ்ஞானி சீதாராமன் நாராயணன், பேராசிரியர் முரளி சீதாராமன், ஜெயக்குமார், வேதமாணிக்கம், கோபிநாத் கல்லாயில், கருப்பையா, கோவிந்த அய்யர், சேமான் பாமிக் கோபி, சுரேஷ் குமார், ஸ்ரீநிவாஸ் சீனிவாசன், கார்த்திகேயன், கிருஷ்ணசாமி ஆகிய வல்லுனர்களுக்கு முன்னாள் மாணவர்கள் விருதுகளை வழங்கினார்.

மேலும் இளம் சாதனையாளர் விருதை பெங்களூரை சேர்ந்த உதவி பேராசிரியர் டாக்டர் ஸ்ரீனிவாசனுக்கு வழங்கினார். விழாவில் விருதை பெற்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது: நான் பொது நிர்வாகத்துறையில் சிறப்பாக செயல்பட்டதாக கூறி இந்த விருதினை எனக்கு வழங்கியுள்ளார்கள். என்னை பொறுத்தவரை இந்த விருது இன்னும் சில ஆண்டுகள் கழித்து எனக்கு வழங்கப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். வங்கி துறையில் நான் சில விஷயங்களை சாதித்து இருந்தாலும் கூட , இப்போது நான் அந்த துறையில் இல்லை. நான் பொது நிர்வாகத்துறைக்கு வந்து சில மாதங்களே ஆகின்றன. இந்த நிலையில் இன்னும் சில ஆண்டுகள் கழித்து இந்த விருது எனக்கு வழங்கப்பட்டிருந்தால் அது பொருத்தமானதாக இருந்திருக்கும்.

கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை பல தனி நபர்கள் வந்து செல்வார்கள். ஆனால் அவர்கள் அங்கு விட்டுச் செல்லும் மதிப்பும், திறமையும் எந்நாளும் நிலைத்து நிற்கும். நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இந்த என்ஐடி கல்லூரியில் படிக்க வந்த பிறகு தான் பரந்த எண்ணம் எனக்கு கிடைத்தது. பல மாநிலங்களைச் சேர்ந்த, பல்வேறு மொழி பேசும் மாணவர்கள் இங்கு படித்துவந்தனர். இங்கு வந்த பிறகுதான் நான் ஹிந்தி பேச கற்றுக் கொள்ள தொடங்கினேன். வெற்றிக்கு நிறைய அளவுகோல்கள் உள்ளன. வெற்றிக்கான இலக்கு சுய லாபத்தினை தாண்டியதாக இருந்தால், வெற்றி தானாக வந்துசேரும் என்றார்.

Related Stories: