திடக்கழிவு மேலாண்மை மூலம் பழசுக்கு வருது புது மவுசு: கருங்குழி பேரூராட்சி புதுவித முயற்சி

மதுராந்தகம், செப். 28: மதுராந்கதம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில் 15 வார்டுகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சி, தமிழகத்திலேயே முதன்மை பேரூராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதல்வரின் பரிசு பெற்றுள்ளது.  இந்நிலையில், கருங்கழி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளின் ஒரு பகுதியாக மக்களால் பயன்படுத்தப்பட்டு குப்பைகளில் வீசப்படும் பழைய செருப்புகளை தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது.

பின்னர், சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. முதலில் இந்த செருப்புகள் சுகாதார பணியாளர்கள் சேகரிக்கும் குப்பைகளிலிருந்து பிரித்தெடுத்து சுத்தப்படுத்தப்படுகிறது. பின்னர், செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரை கொண்டு பிய்ந்துபோன செருப்புகள் தைக்கப்பட்டு காலில் அணிவதற்கு ஏற்றவாறு நன்றாக தைத்து சரி செய்யப்படுகிறது. இந்த செருப்புகள் முதல் கட்டமாக பேரூராட்சி பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அதனை தொடர்ந்து ஏழ்மையான நிலையில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் நல்ல முறையில் இந்த செருப்புகளை தைத்து வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் கூறுகையில், ‘இந்த நடவடிக்கையின் மூலம் மக்காத குப்பையாக அறியப்படும் பிய்ந்துபோன செருப்புகள் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க முடியும். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு வேலை கிடைக்கும். தைக்கப்பட்ட செருப்புகள் பிறருக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, இந்த மறுசுழற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.

Related Stories: