×

போலீசாரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது: 15 கிலோ கஞ்சா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி, செப்.28: போலீசாரின் கவனத்தை திசை திருப்பி, நூதன முறையில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை நேற்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், ‘‘ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியிலிருந்து ஆம்னி பேருந்தில் சென்னைக்கு சிலர் கஞ்சா கடத்தி வருகின்றனர்,’’ எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளனர். அதன்பேரில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்துகளை நிறுத்தி சோதனையிட்டனர்.

ஆனால், எதுவும் சிக்கவில்லை. இதனிடையே, ஆந்திராவில் இருந்து சென்னை வந்த ஒரு அரசு பேருந்தை சந்தேகத்தின் பேரில் ஒரு காவலர் நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், 2 பைகளில் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெபின் ஆண்ட்ரூஸ் (22), முத்துராஜ் (21) என்பதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை வழியாக தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.  அவர்களை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘ஆந்திர மாநிலத்தை தலைமை இடமாக கொண்டு ஒரு கும்பல் அடர்ந்த காட்டுப்பகுதியில் கஞ்சா வளர்த்து வருகிறது.

பின்னர், அதை பேக்கிங் செய்து, ஏஜென்ட்டுகள் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி விற்பனை செய்து வருகிறது. இவ்வாறு கஞ்சாவை கடத்தி செல்ல தூத்துக்குடி, மதுரை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள இளைஞர்களை பயன்படுத்துகின்றனர். இதற்காக அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கொடுப்பதும், போலீசில் சிக்கி அவ்வப்போது சிறை செல்வது வழக்கமாக உள்ளது. தற்போது, இந்த ஏஜென்ட்டுகள் தொலைபேசி வாயிலாக போலீசாரை தொடர்புகொண்டு, பேருந்தை மாற்றி கூறி போலீசாரின் கவனத்தை திசை திருப்பி கஞ்சா கடத்த முயன்றுள்ளனர். ஆனால், வசமாக சிக்கிக் கொண்டனர்,’’ என்றனர்.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்