×

கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு: அதிகாரிகளுடன் வாக்குவாதம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, 15வது வார்டுக்கு உட்பட்ட மேட்டு காலனியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்ன கேசவப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த 1980ம் ஆண்டு முதல், மேட்டு காலனியை சேர்ந்த பெருமாள் உள்ளிட்டோருக்கு விவசாயம் செய்வதற்கு குத்தகையாக வழங்கப்பட்டது. ஆனால், குத்தகை பெற்றவர்கள் அதற்கான பணத்தை அறநிலையத்துறைக்கு தராததுடன், அந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த வீரன், கஸ்தூரி ராஜன் உள்ளிட்ட பலருக்கு சட்ட விரோதமாக வீட்டு மனைகளாக விற்றதாக கூறப்படுகிறது. அதன்படி மனையை வாங்கியவர்கள் அதில் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர்.  

இது தொடர்பாக பரம்பரை அறங்காவலர் வேதமணி, கடந்த 2008ம் ஆண்டு வேலூரில் உள்ள இந்து அறநிலைத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில், 2020ம் ஆண்டு கோயில் நிலத்தில் உள்ள வீடுகளுக்கு தரை வாடகை வசூலிக்க வேண்டும், என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து அறங்காவலர் 2020ம் ஆண்டு முதல், தரை வாடகை கேட்டும், யாரும் தரவில்லை. இதனால், கோயில் நிலத்தில் உள்ள வீடுகளை அகற்ற ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் ப்ரீத்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி வருவாய் துறையினர், காவல் துறையினர், மின் வாரியத் துறையினர் நேற்று சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனி வட்டாட்சியரையும், அறநிலையத்துறை அதிகாரிகளையும் மேட்டு காலனி மக்கள் முற்றுகையிட்டு  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திமுக நகர செயலாளர் அறிவழகன் மற்றும் பேரூராட்சி  துணைத் தலைவர் கேசவன் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கோயில் நிலத்தில் வசிப்பவர்கள் அறநிலையத் துறைக்கு வாடகை செலுத்தவும், வாடகை செலுத்தாவிட்டால் வீடுகள் அகற்றப்படும், எனவும் நோட்டீஸ் வழங்கினர். இதையேற்று அப்பகுதி மக்கள் வாடகை செலுத்துவதாக கூறினர். இதையடுத்து, அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...