ஓட்டப்பிடாரம் பகுதியில் ரூ.54.16 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்

ஓட்டப்பிடாரம், செப். 27: ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.54.16 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் இளவேலங்கல் கிராமத்தில் ரூ.15.47 லட்ச‌ம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிடம், அயிரவன்பட்டியில் ரூ.5 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை, பரிவல்லிக்கோட்டை கிராமத்தில் ரூ.13.50 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டிடம், மணியாச்சி, புதியம்புத்தூர் ஆகிய கிராமங்களில் ரூ.20 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கனிமொழி எம்பி கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசுகையில், பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகத்தில் முன்னுக்கு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

நகர அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டு தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் முழுமையாக பயனடைந்து வருகிறார்கள். மேலும் கிராமப்புற பெண்களும் உயர்கல்வி கற்க ஏதுவாக அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய பெண்கள் உயர்கல்வி படிக்கும்போது அவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையையும் அறிவித்து அரசு வழங்கி வருகிறது. இதேபோல் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ- மாணவிகள், காலை உணவு உண்ண வேண்டும் என்ற வகையில் காலை உணவு திட்டத்தை அளித்துள்ளார். வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில் தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா, டைட்டில் பார்க் உள்பட பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இந்த அரசு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் செயல்பட்டு வருகிறது, என்றார்.

தொடர்ந்து புதியம்புத்தூர் கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை கனிமொழி எம்பி வழங்கினார். நிகழ்ச்சிகளில் சண்முகையா எம்எல்ஏ, யூனியன் சேர்மன் ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, தாசில்தார்கள் கயத்தார் பாக்கியலட்சுமி, ஓட்டப்பிடாரம் நிஷாந்தினி, கல்வி அலுவலர் புவனேந்தீஸ்வரன், பிடிஓக்கள் வெங்கடாசலம், பாடியராஜன், பஞ், தலைவர்கள் இளவேலங்கால் சாவித்ரி முருகேசன், பரிவல்லிக்கோட்டை பெஸ்கி, மணியாச்சி பிரேமா முருகன், ஓட்டப்பிடாரம் இளையராஜா, பள்ளி தாளாளர் செந்தூர்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: