கத்தியால் குத்தியதால் நண்பருடன் சேர்ந்து கல்லால் தாக்கி கொன்றேன் கட்டிட தொழிலாளி கொலையில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

தூத்துக்குடி, செப். 27: என்னை கத்தியால் குத்தியதால்  நண்பருடன் சேர்ந்து கல்லால் தாக்கி கட்டிடத் தொழிலாளியை கொன்றதாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்  அளித்துள்ளார். தூத்துக்குடி- மீளவிட்டான் ரோடு 4வது ரயில்வே கேட்  பகுதி அருகே பாழடைந்த கட்டிடத்தின் மாடியில், கடந்த 22ம் தேதி  தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த ஆத்திமுத்து மகன்  கார்த்திக் (25) கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி தூத்துக்குடி,அழகேசபுரத்தைச் சேர்ந்த கந்தையா மகன் ராம்தேவ் (21), அண்ணாநகர்  4வது தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரை கைது செய்தனர். ராம்தேவ் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: மது குடிக்கும்போது எங்களுக்கு கார்த்திக்குடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அடிக்கடி எங்களுடன் மது குடிப்பார். கடந்த 22ம் தேதி 4வது ரயில்வே கேட் பகுதி அருகே  பாழடைந்த கட்டிடத்தில் நாங்கள் 3 பேரும் மது குடித்தோம். அப்போது போதையில் கார்த்திக், நாயை கல்லால் தாக்கினார். அதை நாங்கள் கண்டித்தோம். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர், தான் வைத்திருந்த கத்தியால் எனது கையில் வெட்டினார்.  இதனால் ஆவேசமடைந்த நானும், எனது நண்பரும் அங்கு கிடந்த இடிந்த சுவரின் கல்லை எடுத்து  அவரை சரமாரியாக தாக்கினோம். இதில் அவர் உயிரிழந்து விட்டார்.  இவ்வாறு கூறியுள்ளார். விசாரணைக்கு பிறகு இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் ராம்தேவை, பாளை  மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை நாங்குநேரி கூர்நோக்கு இல்லத்திலும்  அடைத்தனர்.

Related Stories: