மொபைல் ஆப் மூலம் வருகைப்பதிவேட்டை கைவிடக் கோரி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை தூய்மைபணியாளர்கள் முற்றுகை கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மேயர் உறுதி

நெல்லை, செப். 27: நெல்லை மாநகராட்சியில் மொபைல் ஆப் மூலம் வருகைப்பதிவேடு பராமரிக்கும் முறையை கைவிட வேண்டும். துாய்மை பணியாளர்களிடம் பிடித்தம் செய்த பிஎப்., நிலுவைத் தொகையை மாநகராட்சி நிர்வாகம் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்த  வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப்பணியாளர்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். நெல்லை மாநகராட்சியில் வார்டு வாரியாக மொபைல் ஆப் மூலம் வருகை பதிவேடு பராமரிக்கும் புதிய முறையால் தூய்மை பணியாளர்களின் பேட்டரி வாகனங்களை வார்டுகளில் நிறுத்தினால் திருட்டு போகும் அபாயம் உள்ளது. மேலும் பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜர் வசதி மற்றும் அதற்கான உபகரணங்கள் வழங்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே உள்ளது போல் அலகு அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் பதிவு செய்ய தூய்மை பணியாளர்களை அனுமதிக்க வேண்டும்.

 தூய்மை பணியாளர்களிடம் பிடித்தம் செய்த பிஎப்., நிலுவைத்தொகை ரூ.2 கோடியை மாநகராட்சி நிர்வாகம் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கான ஊதியத்தை மாதந்தோறும் 1ம் தேதி மாநகராட்சி வழங்க வேண்டும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்பட்ட சம்பள நிலுவைத் தொகையை செப்டம்பர் மாத சம்பளத்தோடு வழங்க வேண்டும். கடந்த காலங்களில் 25 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். இதில் எட்டு தொழிலாளர்கள் விபத்தில் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு உடனே பிஎப் நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை நேற்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து முற்றுகை போராட்டத்திற்கு தலைமை வகித்த நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சிஐடியூ) தலைவர் மோகன், சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகன், பொதுச்செயலாளர் மாரியப்பன், பொருளாளர் செல்லத்துரை, துணைத்தலைவர் நாராயணன், சிஐடியூ துணை செயலாளர் சரவண பெருமாள், செயற்குழு உறுப்பினர் சுடலைராஜ் ஆகியோரிடம் மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை கேட்டறிந்தனர். அப்போது அங்கு கூச்சல் அதிகமானது. இதனால் மேயர், துணை மேயர் மற்றும் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி சுகாதார நிலைக்குழு சேர்மன் ரம்ஜான் அலி, சுகாதார அதிகாரிகள், கவுன்சிலர்கள் ஆகியோர் மாநகராட்சி அறையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என கூறியதையடுத்து  முற்றுகையிட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் மாநகராட்சியில் நேற்று தூய்மைப்பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் மூன்று நாட்களாக நடந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று மதியத்திற்கு மேல் விலக்கி கொள்ளப்பட்டது.  முற்றுகை போராட்டத்தையொட்டி பாதுகாப்பு பணியில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

 நெல்லை மாநகராட்சியில் பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜர் வசதி மற்றும் அதற்கான உபகரணங்கள் வழங்க வேண்டும்

தூய்மை பணியாளர் களிடம் பிடித்தம் செய்த பிஎப்., நிலுவைத்தொகை ரூ.2 கோடியை மாநகராட்சி நிர்வாகம் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்பட்ட சம்பள நிலுவைத் தொகையை செப்டம்பர் மாத சம்பளத்தோடு வழங்க வேண்டும்.

கடந்த காலங்களில் 25 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். இதில் எட்டு தொழிலாளர்கள் விபத்தில் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு உடனே பிஎப் நிதி வழங்க வேண்டும்.

Related Stories: