வளம் மீட்பு மையத்தில் தீ விபத்து

ஓசூர், செப்.26: ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆனந்நகர் பகுதியில் ஓசூர் மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வளம் மீட்பு மையம் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பகுதியில் நகரத்தில் சேகரிக்கப்பட்ட பாலித்தின் கவர்கள் மற்றும் குப்பையில் இருந்து பிரிக்கப்பட்ட பாலித்தின் வேஷ்ட் கவர்களை கொண்டு சென்று இயந்திரங்கள் மூலம் தூளாக்கப்பட்டு வருகிறது. தூளாக்கப்பட்ட இவைகளை சிமெண்ட் சாலைகள் அமைக்கும் போது அதில் கலந்து போடப்படும். இந்நிலையில், தூள் செய்ய பயன்படுத்தப்பட்ட இயந்திரம் மற்றும் பாலிதின் பேப்பர் குடோனில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணிபுரியவில்லை. மற்ற வேலைகள் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் புகை வருவதை கண்டு ஷெட்டரை திறந்து பார்த்தனர். அப்போது குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்க போராடினர். தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிலர் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்த அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ராயக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்களும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தால் மாநகராட்சிக்கு சொந்தமான குடோனில் பல லட்சம் மதிப்புள்ள பாலிதீன் பேப்பர் மற்றும் அதை துண்டாக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரம் எரிந்து நாசமானது. தகவலின் பேரில் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டு வருகின்றனர்.

Related Stories: