கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி

தேன்கனிக்கோட்டை, செப்.26: அஞ்செட்டி அருகே நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் குளித்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஆசாத்தெருவில் வசித்து வருபவர் அயாத்பாஷா. இவரது மகன் ஷாகின்ஷா (20). ஓசூர் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று ஷாகின்ஷா மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஷமீர் (18) உட்பட 5 நண்பர்களுடன் அஞ்செட்டி மலை பகுதி மொசலு மடுவு என்ற இடத்தில் உள்ள நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்றுள்ளனர். கடந்த வாரத்தில் பெய்த மழையால் நீர்வீழ்ச்சியில் அதிக தண்ணீர் சென்றது. அதில் ஷாகின்ஷா குளித்த போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்று நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியாததால் அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த அஞ்செட்டி போலீசார், தேன்கனிக்கோட்டை தீயணைப்புதுறையினருக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்து நீரில் மூழ்கிய மாணவரை சடலமாக மீட்டனர். பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: