×

மாவட்டத்தில் 57 ஊராட்சியில் 12,151 பேருக்கு நலஉதவிகள்

தர்மபுரி, செப்.26: தர்மபுரி மாவட்டத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 57 கிராம ஊராட்சிகளில், 12,151 விவசாயிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை சார்பில் மொத்தம் 72.42 கோடி மதிப்பில், வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை, கலெக்டர் சாந்தி தலைமையில், செய்தியாளர்களுடன் சென்று களஆய்வு நடந்தது. அப்போது, நல்லம்பள்ளி அதியமான்கோட்டை வெத்தலைக்காரன் பள்ளம் பகுதியை சேர்ந்த ராமசாமி தோட்டத்தில், 1.50 ஏக்கர் நிலப்பரப்பில் விதைக்காக தரணி ரக நிலக்கடலை பயிரிட்டிருந்தார். இது கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, தேவர் ஊத்துப்பள்ளம் பகுதியை சேர்ந்த மாரியப்பன், ₹2,55,709 (70 சதவீதம்) மானியத்துடன் ₹3,65,298 மதிப்பில் சோலார் மோட்டார் பம்ப் செட் அமைத்து, கால்நடை தீவனப்புல் வளர்த்து வருவதை பார்வையிட்டனர்.

தொடர்ந்து, பாளையம்புதூர் தொம்பரகாம்பட்டியை சேர்ந்த சண்முகம், ₹1,77,500 மானியத்துடன் ₹3,55,000 மதிப்பில் தனது நர்சரியில் 500 சதுர மீட்டர் பரப்பளவில் நிழல் வலைக் கூடம் அமைத்து, வீரிய ரக காய்கறி, பூச்செடிகள் குழிதட்டு நாற்றுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார். பின்னர் கலெக்டர் சாந்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் 57 கிராம ஊராட்சிகளில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், ₹26.83 லட்சம் மானியத்தில் தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான்கள், விசைத்தெளிப்பான்கள், விதைகள், பயிறுவகைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு 12,151 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் சிறுதானியங்கள் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும்,’ என்றார். இந்த கள ஆய்வின்போது, தர்மபுரி வேளாண்மை இணை இயக்குநர் (பொ) முகமது அஸ்லாம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மாலினி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) குணசேகரன், நல்லம்பள்ளி தாசில்தார் பெருமாள் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா