ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

நெல்லிக்குப்பம், செப். 27: நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் சோதனைச்சாவடி அருகே தென்பெண்ணை ஆற்றில் அடையாளம் தெரியாத வாலிபர் இறங்கி குளித்துள்ளார். அப்போது ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அந்த நபர் ஆற்றுத் தண்ணீரில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். இதனைக் கண்ட கரையோரம் இருந்தவர்கள் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்- இன்ஸ்பெக்டர் சந்திரவேல் மற்றும் போலீசார் தீயணைப்பு நிலையத்துக்கு தொடர்பு கொண்டு தீயணைப்பு படை வீரர்களுடன் விரைந்து சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அந்த நபரை ஒரு மணி  நேரம் போராட்டத்திற்கு பின்னர் சடலமாக மீட்டனர்.  இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை. இடுப்பில் மது பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இறந்தவரின் உடலை நெல்லிக்குப்பம் போலீசார் கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: