80 அடி ஆழ பொதுக்கிணற்றில் தவறி விழுந்து பனியன் தொழிலாளி பலி

திருப்பூர், செப்.27: திருப்பூர், கொங்கு மெயின் ரோடு பகுதியில் 80 அடி ஆழ பொதுக்கிணற்றில் தவறி விழுந்த பனியன் நிறுவன தொழிலாளி பலியானார். திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, கொடிக்கம்பம் பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ் (55). பனியன் தொழிலாளி.  நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் அருகே உள்ள பொது கிணற்றுக்கு அருகே சென்ற போது தவறி கிணற்றுக்குள் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் இதை கவனித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான குழுவினர் கிணற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 80 அடி ஆழ கிணற்றில் 30 அடிக்கு தண்ணீர் இருந்தது. மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி சுமார் 6 மணி நேரம் போராடி பவுல்ராஜின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: