திரும் பெறும் திட்டத்தின் கீழ் டாஸ்மாக் கடைகளுக்கு 80 சதவீத காலி மது பாட்டில்கள் வழங்கல்

ஊட்டி, செப். 27:  நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும் திட்டத்தின் கீழ் 80 சதவீத காலி பாட்டில்கள் திரும்ப வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் குடியிருப்பை ஒட்டியும், வனங்களை ஒட்டியும் அமைந்துள்ளன. இந்த மதுபான கடைகளுக்கு அருகில் உள்ள சிறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள், அலுமினிய பாயில் பேப்பர் கப்கள் போன்றவைகள் தராளமாக விற்கப்படுகின்றன. இவற்றை வாங்கும் குடிமகன்கள் அவற்றை அருகில் சாலையோரங்கள், நடைபாதைகள், நீர்நிலையை ஒட்டிய பகுதிகளில் விவசாய தோட்டங்களில் வைத்து மது அருந்துகின்றனர். பின்னர் பிளாஸ்டிக் குப்பைகள் மதுபாட்டில்கள் போன்றவற்றை அப்படியே வீசி சென்று விடுகின்றனர். இதனால் சுற்றுசூழல் பாதிப்பது மட்டுமின்றி நீர்நிலைகளும் மாசடைந்து வருகின்றன. வனங்களில் வீசி எறியப்பட்டு சேதமடைந்த மதுபாட்டில்களை மிதித்து காயமடையும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதற்கான திட்டத்தை வகுக்க அரசுக்கு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் ஒவ்வொரு மதுபாட்டில்களுக்கும், அவற்றின் அதிகபட்ச சில்லறை விலையில் இருந்து கூடுதலாக ரூ.10 வசூலிக்க வேண்டும். இதற்காக மதுபான பாட்டில்களின் மேல் ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும். காலி மதுபாட்டில்களை திரும்ப வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.10ஐ திரும்ப வழங்க வேண்டும். இத்திட்டம் கடந்த மே மாதம் அமலுக்கு வந்தது. திரும்ப பெறப்பட்ட பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்து இட நெருக்கடியை ஏற்படுத்தி வந்தது. தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் குவித்து வைக்கப்படும் காலி பாட்டில்களை சேகரிக்க டெண்டர் விடப்பட்டு தற்போது இரு நாட்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் எடுத்தவர்கள் காலிபாட்டில்களை எடுத்து சென்று விடுகின்றனர். இந்த சூழலில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு 4 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் 80 சதவீதத்திற்கு மேல் காலி மதுபாட்டில்கள் திரும்ப வருவதாக டாஸ்மாக் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: