இன்று உலக சுற்றுலா தினத்தையொட்டி ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு

ஊட்டி, செப். 27: உலக  சுற்றுலா தினத்தையொட்டி இன்று ஊட்டி வரும் அனைத்து சுற்றுலா  பயணிகளையும் பாரம்பரிய முறைப்படி வரவேற்க சுற்றுலாத்துறை முடிவு  செய்துள்ளது. ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள்  வருகின்றனர். குறிப்பாக, கோடை சீசனின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள்  வருகின்றனர். இது தவிர இரண்டாம் சீசனான செப்டம்பர் முதல் டிசம்பர் வரய வெளிநாடு மற்றும் வெளிமாநில  சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவது வழக்கம். இரண்டாம் சீசனான தற்போது நிலவும்  குளிரான காலநிலையை அனுபவிப்பதற்காகவே அதிகளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்  ஊட்டி வருகின்றனர். இரண்டாம் சீசனில் வரும் சுற்றுலா பயணிகளை  மகிழ்விப்பதற்காக தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்கள்  செய்யப்பட்டுள்ளன.

ஆண்டு தோறும் செப்டம்பர் 27ம் தேதி உலக சுற்றுலா  தினம் கொண்டாடப்படும் நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மாவட்ட  நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை தமிழகத்தின் பாரம்பரிய முறைப்படி  வரவேற்பது வழக்கம். மேலும், பல்வேறு விழாக்கள் நடத்துவதும் வழக்கம்.  அதேபோல், இம்முறையும் ஊட்டி ரயில் நிலையத்தில் இன்று உலக சுற்றுலா தினம்  கொண்டாடப்படவுள்ளது. வழக்கம்போல், வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா  பயணிகளை மாலை அணிவித்து, தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்க சுற்றுலாத்துறை  மற்றும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நீலகிரி மாவட்ட சுற்றுலா  அலுவலர் உமாசங்கர் கூறியதாவது: உலக சுற்றுலா தினம் செப்டம்பர் மாதம் 27ம்  தேதியன்று ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை (இன்று) உலக சுற்றுலா  தினம் கொண்டாடப்படும் நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை ரயில்  நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து, இனிப்புக்கள் வழங்கி  வரவேற்பு அளிக்கப்படும். சுற்றுலா தினத்தையொட்டி கல்லூரி மற்றும் பள்ளி  மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும்  வழங்கப்படவுள்ளது. இதற்கான விழா ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு  மையத்தில் நடக்கிறது. இதில், கலெக்டர் அம்ரித் கலந்துக் கொண்டு பல்வேறு  போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கவுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

பூங்கா மாடங்களில் மலர் தொட்டி அடுக்கும் பணி துவக்கம்: இரண்டாம் சீசனையொட்டி வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டு தோறும் தாவரவியல் பூங்காவில் மலர் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முதல் சீசனின் போது, 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் ெதாட்டிகள் மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். இரண்டாம் சீசன் போது, 10 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்படும்.

இந்த ஆண்டு 10 ஆயிரம் தொட்டிகளில் மேரி கோல்டு, பேன்சி, டெய்சி, டேலியா, சால்வியா உட்பட பல்வேறு மலர் செடிகள் அதிகளவு வைக்கப்பட்டுள்ளன. இது தவிர பல்வேறு அலங்கார செடிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தொட்டிகள் மாடங்களில் அடுக்கப்படும். மேலும், பல்வேறு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படும். கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்ததால், மலர்கள் பூப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு ஊட்டியில் வெயில் அடித்து வரும் நிலையில், தற்போது அனைத்து செடிகளிலும் மலர்கள் பூக்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக, தற்போது மாடத்தில் தொட்டிகள் அடுக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.  ஓரிரு நாட்களில் இப்பணிகள் முடிந்தவுடன், சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மேரிகோல்டு மலர் தொட்டிகளை கொண்டு ஆர்கானிக் என்ற ஆங்கில வார்த்தை அலங்காரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தொடர்ந்து மாடங்களில் தொட்டிகள் அடுக்கும் பணிகள் மற்றும் புல் மைதானங்களில் ெதாட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்களும் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: