பூண்டி ஒன்றியத்தில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

திருவள்ளூர்,செப்.27: திருவள்ளூரில் செயல்பட்டு வரும் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம்,பூண்டி ஒன்றியத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கல்வியை மையமாக கொண்ட குழந்தை வளர்ச்சி திட்டத்தினை சில்ரன் பிலீவ் நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக பூண்டி ஒன்றியத்தில் உள்ள பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வட்டார கல்வி அலுவலர் ஆனி பெட்ரிஷியா பொற்கொடி, வட்டார கல்வி அலுவலர் பூவராகவ மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இப்பயிற்சியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் கடமைகள், பொறுப்புகள், பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்குரிய வழி முறைகள், இடைநிற்றலை தவிர்த்தல், குழந்தை நேய சூழலை பள்ளிகளில் உறுதி செய்தல், பள்ளிக்கான வளர்ச்சி திட்டம் தயாரித்தல், அனைத்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்களின் பங்களிப்பினையும், பங்கேற்பினையும் பள்ளி மேம்பாட்டிற்கும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கும், குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்தும் பள்ளி மேலாண்மைக்குழு பயிற்றுனர் வழக்கறிஞர் சுப தென்பாண்டியன் கலந்து கொண்டு பயிற்சியளித்தார்.

இதில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் பூண்டி வட்டார கல்வி ஆசிரியர் பயிற்றுனர் பூங்கொடி, பயிற்றுனர் செந்தில், ஐ.ஆர்.சி.டி.எஸ் திட்ட மேலாளர்  விஜயன், கள ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா, பூங்கொடி, தபித்தாள், தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: