திருக்காலிமேடு பகுதியில் பராமரிப்பில்லாமல் மாசடைந்த பெரிய வேப்பங்குளம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம், செப்.27: காஞ்சிபுரம் மாநகராட்சியின் 26வது வார்டுக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பெரிய வேப்பங்குளம் அமைந்துள்ளது. கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன், இந்த வேப்பங்குளத்து நீரை குடிக்கவும், சமைக்கவும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த வேப்பங்குளம், தற்போது பராமரிப்பின்றி குப்பை மற்றும் கழிவு நீர் வெளியேற்றம் காரணமாக அசுத்தம் அடைந்துள்ளது. மேலும் கரையோரங்களில் புதர் மண்டி, பாசி படர்ந்து தண்ணீர் பச்சை நிறமாக மாறியுள்ளது. காஞ்சிபுரம் சுற்றியுள்ள பல அம்மன் கோயில்களின் ஆடித்திருவிழா, கூழ்வார்த்தல் விழாவின்போது, ஜலம் திரட்டும் நிகழ்ச்சிக்கு, இந்தக் குளத்து நீரையே கடந்த காலங்களில் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், தற்போது, முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்தில் புதர் மண்டி, பாசி படர்ந்து குளத்து நீர் பச்சை நிறமாக மாறியதோடு, கழிவுநீரும் கலந்ததால், குளத்து நீர் மாசடைந்தது.

தற்போது, இப்பகுதிவாசிகள் இந்த வேப்பங்குளத்து நீரை பயன்படுத்துவதில்லை. எனவே, இதனை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோன்று, சற்று தொலைவில் சின்ன வேப்பங்குளம் உள்ளது. இந்தக் குளமும் பராமரிப்பில்லாமல், கழிவுநீர் கலந்து மாசடைந்து உள்ளது.

எனவே, திருக்காலிமேட்டில் உள்ள சின்ன வேப்பங்குளம், பெரிய வேப்பங்குளம் என 2 குளங்களையும் தூர்வாரி சீரமைத்து, குளத்தை சுற்றிலும் சுற்றுச் சுவருடன், நடைபாதை அமைத்தால், இப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, பகுதிவாசிகள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதியாக இருக்கும். இந்த கோரிக்கையை நிறைவேற்றுமா மாநகராட்சி நிர்வாகம் என அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Related Stories: