தோகைமலை பகுதியில் நஞ்சை நிலங்களில் வாழை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

தோகைமலை, செப். 27: கரூர் மாவட்டத்தில் காவிரி கரை ஓரம் மற்றும் அதை சார்ந்து உள்ள நஞ்சை நிலங்களில் மிக முக்கிய பயிராக வாழை சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். இதேபோல் மேட்டு பகுதிகளில் தண்ணீர் அதிகமாக உள்ள சில பகுதிகள், வீட்டு தோட்டப்பகுதிகள் என்று வாழை சாகுபடியை விவசாயிகள் விரும்பி செய்து வருகின்றனர். இதனால் வாழை சாகுபடியில் அதிகமான லாபம் பெறுவது குறித்து முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அனைத்து சந்தைகளிலும் எப்போதும் தேவை உள்ள பழங்களில் ஒன்றாக இருந்து வருவது வாழைப்பழம் ஆகும். வாழைப்பழத்தில் பல்வேறு ரகங்கள் இருந்தாலும் பூவம், ரஸ்தாளி, மொந்தம் ஆகிய ரகங்கள் கொண்ட வாழைப்பழங்கள் தான் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் வாழை சாகுபடிசெய்யும் பெரும்பாலான விவசாயிகள் பூவம், ரஸ்தாளி, மொந்தம் ஆகிய ரகங்களை விரும்பிச் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த வாழை சாகுபடி முறையில் இலைகள், பூ, தண்டு, காய், பழம் மற்றும் வாழை மரத்தின் நார் என்று அனைத்தும் சந்தைகளில் எப்போதும் மக்களுக்கு தேவை உள்ள ஒன்றாக இருந்து வருகிறது. இதே போல் சந்தைகளில் அதிக வருமானம் தரக்கூடிய ஒரு வளமான சாகுபடியாகவும் காணப்படுகிறது. மேலும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இலை, காய், பழங்கள் மற்றும் மலர்களை பயன்படுத்துவதற்கு வாழைமரத்தின் நார் ஆகியவைகள் தவிர்க்க முடியாத அளவிற்கு பயன்பட்டு வருகிறது. ஆகவே வாழை சாகுபடியும் விவசாயிகள் அதிகமான வருமானம் பெறலாம். வாழை சாகுபடி முறைகள்: வாழையில் பல்வேறு ரகங்கள் சாகுபடி செய்கின்றனர்.

இதில் நேந்திரம் ரகத்தை சாகுபடி செய்யும் போது ஒரு ஏக்கர் தோட்டக்கலை நஞ்சை நிலத்தில் சாகுபடி செய்யும் பூவம்பழம், மொந்தம், ரஸ்தாளி ஆகிய ரகங்களை சாகுபடி செய்யும் போது 2.1 மீட்டர் நீளம், 2.1 மீட்டர் அகலம் கொண்ட இடைவெளியில் நடுதல் வேண்டும். மலை பகுதிகளில் சாகுபடி செய்யும் போது 3.6 மீட்டர் நீளம் மற்றும் அகலம் கொண்ட இடைவெளியில் வாழை விதைகளை நடுதல் வேண்டும். இதேபோல் ரோபாஸ்டா நேந்திரம் 1.8 மீட்டர் அகளமும் 1.8 மீட்டர் நீளமும் கொண்ட இடைவெளியில் வாழை விதையை நடுதல் வேண்டும். இதேபோல் குள்ள வாழையை 1.5 மீட்டர் நீளம் 1.5 மீட்டர் அகலம் கொண்ட இடைவெளியில் நடுதல் வேண்டும். வாழை சாகுபடி முறைகளை பொறுத்தவரை ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஒரு பருவ காலமும், செப்டம்பர் முதல் அக்டோபர் வரை ஒரு பருவக்காலம் மற்றும் டிசம்பர் முதல் ஜனவரி வரை ஒரு பருவக்காலம் என 3 பருவக்காலங்கள் உள்ளது. இதில் ஜூன் மாதம் நடவு செய்தால்

வாழை மரம் நன்றாக வேகமாக வளரும்.மண் வகை மற்றும் நிலம் தயாரிப்புகள்: வாழை சாகுபடியை பொறுத்தவரை நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண் கொண்ட நிலம் சாகுபடிக்கு ஏற்ற நிலமாகும். கார அமிலம் உள்ள மண்ணில் வாழை நன்றாக வளரும். உப்பு தன்மை கொண்ட நிலமானது வாழை சாகுபடிக்கு ஏற்றதாக இருக்காது. வாழை சாகுபடியில் எந்த நடவு முறைகளும் தேவையில்லை. லேசாக மண்ணை பறித்து அதன் மேல் கன்றுகளை நட்டு மண் அணைத்தல் வேண்டும். விதைநேர்த்தி: வாழை விதை நேர்த்தி செய்வதற்கு பக்கக்கன்றுகளை முதலில் நடவு செய்ய வேண்டும். பின்னர் வேர்களில் அழுகிய பகுதியை வெட்டி சரி செய்யலாம். ரஸ்தாளி, மொந்தன் விருப்பாச்சி ரகங்களில் வாடல் நோயைத் தவிர்க்க வேர்கிழங்கை வெட்டி 0.1 சதவீதம் எமிசான் கரைசலில் 1 லிட்டர் நீரில் 1 கிராம் 5 நிமிடங்களுக்கு நனைத்து எடுக்க வேண்டும். 5 முதல் 6 வரை இலைகளை உடைய திசு வளர்ப்பு வாழையைப் பயன்படுத்த வேண்டும்.

விதைத்தல் மற்றும் நடவு முறைகள்: வாழை சாகுபடியில் ஒற்றை வரிசை சாகுபடி முறை, இரட்டை வரிசை சாகுபடி முறை, சதுர வாழை சாகுபடி முறை, முக்கோணம் வடிவ சாகுபடி முறை என்று 4 விதமான நடவு முறைகள் உள்ளது. வாழைக்கன்றுகள் குழி அமைத்து ஊன்றுதல், சால் அமைத்து நடவு செய்தல், அகழி நடவு முறை, அடர்த்தியாக நடவு செய்தல் என்று 4 முறைகளில் வாழை சாகுபடியில் நடவு செய்யலாம். நடவு செய்த 4வது மாதம் முதல் சொட்டு நீர் பாசனம் வழியாக ஒரு நாளைக்கு 15 லிட்டர் வீதம், என்று ஒரு மாதம் வரை நீர் பாசனம் இட வேண்டும். நடவு செய்து 5வது மாதத்தில் சாகுபடி செய்த வாழை மரத்தில் இருந்து தார் வெளியே வரும். அந்த நேரத்தில் ஒரு வாழை மரத்திற்கு 20 லிட்டர் தண்ணீரும், அதன்பிறகு அறுவடை செய்யும் வரை தினமும் 25 லிட்டர் தண்ணீர் இடுவது சாகுபடிக்கு தேவையானது ஆகும்.

வாழை சாகுபடிக்கு ஏற்ற உரங்கள்: வாழை சாகுபடி முறையை பொறுத்தவரை அரை வட்ட வடிவ பாத்தியை மரத்திற்கு கீழே அதாவது மரத்தை சுற்றி அமைக்க வேண்டும். அதில் 315 கிராம் (40:30:40) என்று தழை சாம்பல் சத்தை கலந்து இட வேண்டும். பின்னர் 130 கிராம் மியூரோட் சாம்பல் சத்தை அக்டோபர், ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் இட வேண்டும். இதேபோல் அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தை 20 கிராம் என்ற அளவிற்கு 2வது மற்றும் 4வது மாதத்தில் சாகுபடி செய்த அனைத்து ரகத்திற்கும் இடலாம். மேலும் இயற்கை விவசாயத்தின் ஊட்டச்சத்து வழங்கும் ஜீவாமிர்தத்தையும் பயன்படுத்துகின்றனர். இதில் ஜீவாமிர்தம் அனைத்து வகையான பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். இதற்கு எந்த வகையான கட்டுப்பாடுகளும் இல்லை.

சாகுபடி செய்யப்பட்ட வாழை மரங்களை பாதுகாக்கும் முறைகள்: சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் வாழை மரத்தின் அருகில் உள்ள இடைக்கன்றுகளை நீக்கி ஒவ்வொரு வாழை மரங்களுக்கு கம்புகளால் முட்டு கொடுக்க வேண்டும். இதே போல் தாருக்கு மூடாக்கு போடுதல், குழையை மூடி வைத்தல், சிப்புகளை நீக்குதல், கொண்ணை உரித்தல், காற்றுதடுப்பான், பயிர் பரப்பு மற்றும் ஒளிகுறுக்கீடு, பயிரின் உயரம் மற்றும் தடிமன், பூத்தல் மற்றும் முதிர்ச்சி அடைதல், குழை எடை மற்றும் தரம் ஆகிய பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் செய்ய வேண்டும். இதேபோல் வாழையை கிழங்கு வண்டு தாக்குதல், அசுவினி பூச்சிகள் தாக்குதல், சாற்றுண்ணிகள், கண்ணாடி இறக்கை பூச்சிகள் தாக்குதல், நூற்புழுக்கள் தாக்குதல், தண்டுத்துளைக்கும் வண்டுகள் மற்றும் சிகடோக்கா இலைப்புள்ளி நோய்கள் ஆகியவற்றில் இருந்து வாழைப்பயிர்களை பாதுகாக்க வேண்டும்.

அறுவடை மற்றும் மகசூல்: நடவு செய்த 12 முதல் 15 மாதத்தில் இருந்து அறுவடைக்கு தயாராகிவிடும். மண் ரகங்களை பொறுத்து பூ பூத்த 90 முதல் 150 நாட்களில் தார்களை அறுவடை செய்யலாம். மேற்படி ஆலோசனைகளை பின்பற்றி சாகுபடி செய்தால் ஒரு ஏக்கர் வாழை சாகுபடிக்கு அதிகமான எடையுடன் கூடிய வாழை தார் உருவாகி வருடத்திற்கு அதிகமான மகசூல் கிடைக்கும். இதே போல் ரகங்களை பொறுத்து மகசூல் மாறுபடும் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories: