இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க நாகப்பட்டினம் கடற்கரையில் 5 லட்சம் பனைவிதை நட திட்டம்

நாகப்பட்டினம், செப்.27: இயற்கை சீற்றங்களில் இருந்து நாகப்பட்டினத்தை பாதுகாக்க கடற்கரை ஓரங்களில் 6 கிலோ மீட்டர்தூரத்திற்கு 5 லட்சம் பனை விதை நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் இயற்கை சீற்றங்கள் நிறைந்த மாவட்டம் கஜா, சுனாமி என பல்வேறு இயற்கை சீற்றங்களை சந்தித்துள்ளது. இவ்வாறு இயற்கை சீற்றங்கள் எழும் போது எல்லாம் பொதுமக்கள் அதிகளவில் தங்களது உடமைகளை இழந்துள்ளனர். சுனாமியின் போது அதிக அளவில் உயிர் இழப்பை சந்தித்த மாவட்டமாக நாகப்பட்டினம் உள்ளது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டம் இயற்கை இடர்பாடு நிறைந்த மாவட்டமாக கருதப்படுகிறது. மழை, வெள்ளம், புயல் என இயற்கை இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதே போல் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு புதிய நடைமுறைகளை கையாண்டு வருகிறது. குறிப்பாக வேளாங்கண்ணி பகுதியில் மின்கம்பங்கள் அனைத்தும் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் பகுதியில் பூமிக்கு அடியில் மின்கம்பிகள் புதைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது. சுனாமி மற்றும் கஜா காலங்களில் கடற்கரையை ஒட்டி இருந்த பனை மரங்கள் அதிக அளவில் சேதங்கள் ஏற்படாமல் பாதுகாத்தது. இதனால் கடற்கரை ஓரங்களில் பனை மரங்களை நடும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் பணிகளை செய்து வருகிறது. இதன்படி வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் ஊராட்சியில் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரையை ஒட்டி பனை விதைகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

5 லட்சம் பனை விதைகளை நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: பிரதாபராமபுரம் பகுதி கடற்கரையை ஒட்டிய கிராமமாகும். கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி மற்றும் 2018ம் ஆண்டு வீசிய கஜா புயல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்கள் காலத்தில் எங்கள் கடலோர கிராமம் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. அந்த காலத்தில் கடற்கரை ஓரத்தில் இருந்த மற்ற மரங்கள் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் பனை மரங்கள் பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. மேலும் இந்த பனை மரங்கள் எங்கள் பகுதிக்கு இயற்கை அரண் போல் அமைந்தது. எனவே இனி வரும் காலங்களில் இயற்கை சீற்றங்கால் அதிக அளவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் பனை மரத்தை அதிக அளவில் நட வேண்டும் என ஊராட்சி சார்பில் திட்டமிட்டு பனை விதைகளை நட்டு வருகின்றனர்.

இயற்கை அரண் போல் விளங்கும் பனை விதையை 5 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் பனை விதைகளை விதைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2ஆண்டுகளில் 2 லட்சம் பனை விதைகள் எங்கள் பகுதியில் விதைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணியை நேற்று முதல் தொடங்கியுள்ளோம். வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன் பனை விதைகளை நடும் பணியை தொடங்கி வைத்துள்ளார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரம்யா தமிழரசன், ஊராட்சி செயலர் சீதா ஆகியோர் முயற்சி செய்துள்ளனர். செருதூர் கடற்கரையிலிருந்து- ராமர்மடம் வரை 6 கிலோ மீட்டர் தொலைவிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு பனை விதை நடப்பட்டுள்ளது. பனை மரங்கள் பெரிதாக வளர்ந்தவுடன் எங்கள் கிராமத்தை இயற்கை சீற்றமான பெரிய அளவிலான பாதிப்பிலிருந்து காக்க முடியும் என தெரிவித்தனர்.

Related Stories: