பெரம்பலூரில் கிராம அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி

பெரம்பலூர், செப். 27:  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 6 வார காலத்திற்கு நடைபெற உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கான நிர்வாகப் பயிற்சியை நேற்று(26ம் தேதி) பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி முன்னிலையில் தொடங்கி வைத்து பயிற்சியை முறையாக கற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் பணியாற்ற வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி, பணி உயர்வு மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமனம் உட்பட 44 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி 26ம் தேதி முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து விடு முறை நாட்கள் நீங்கலாக 6 வார காலத்திற்கு என வருகிற நவம்பர் 16ம் தேதி வரை நடைபெற உள் ளது. காலை 9 மணிமுதல் மாலை 5மணி வரை சனிக்கிழமைகள் உட்பட அனைத்து வேலை நாட்களிலும் பயிற்சி நடைபெறும்.

இந்தப் பயிற்சியில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பொது சுகாதாரம், கால்நடைத் துறை, வேளாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல்துறை, வனத்துறை, நெடுஞ்சாலை துறை, நில சீர்திருத்தம், தொழிலாளர் நலம், கூட்டுறவுத்துறை, புள்ளியியல்துறை, கனிமத்துறை, நீர் வளத்துறை, சமூக நலத்துறை போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் கிராம நிர்வாக அலுவலர்களின் கடமைகளும், பொறுப்புகளும் உணர்ந்து பணியாற்றவும், பயிர் ஆய்வு, சட்டம் ஒழுங்கு, கிராம கணக்குகளை பராமரித்தல், மரங்களை பாதுகாத்தல், ஆக்கிரமிப்புகளை தடுத்தல் மற்றும் அதன் கணக்குகளை பராமரித்தல், நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாறுதல்களுக்கான மனுக்களுக்கும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படையான 20 வகை(வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், விதவை சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட) சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகைக்கான மனுக்களுக்கு உட னுக்குடன் தீர்வு காணுதல், விபத்து நிவாரணம், இயற்கை மரணம், திருமண உத வித்தொகை போன்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு மேற்கொண்டு தலைமையிடத்திற்கு அனுப்பி வைத்தல் போன்ற கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சட்ட ரீதியாக எவ்வாறு கையாண்டு அதற்கு விரைந்து பதிலளிப்பது என்பது குறித்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சியை முறையாக கற்றுக் கொண்டு தங்களது பகுதியிலுள்ள ஏழை மக்களுக்கு தமிழக அரசின் நலத்திட்டங்கள் சென்று சேரும் வகையில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் வெங்கட பிரியா பயிற்சி பெறுவோருக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் கவிதா(ஆலத்தூர்) சின்னதுரை (குன்னம்) பெரம்பலூர் தலைமையிடத்து வருவாய் ஆய்வாளர் சசிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: