கும்பகோணத்தில் மாநில அளவில் கூடைப்பந்து போட்டி

கும்பகோணம், செப்.27: கும்பகோணத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு அரசு கொறடா கோவி.செழியன் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். கும்பகோணத்தில் அண்ணா கூடைப்பந்தாட்ட கழகம் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி இணைந்து மூன்றாவது ஆண்டாக நடத்திய மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி கல்லூரி வளாகத்தில் கடந்த 23ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியை எம்எல்ஏ அன்பழகன், கல்லூரியின் தாளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். சென்னை, நாமக்கல், தூத்துக்குடி, விருதுநகர், சேலம், மேட்டூர், திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதியிலிருந்து 20 சிறந்த அணியினர் கலந்து கொண்டனர்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியை கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் துவக்கி வைத்தார். தொடர்ந்து அன்று இரவு வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் 76 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்ற சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரி அணியினருக்கும், 64 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பெற்ற சத்தியபாமா அணியினருக்கும், மூன்றாம் இடம் திண்டுக்கல் பேஸ்கட்பால் கிளப் அணியினருக்கும், நான்காம் இடம் பெற்ற டிஆர்டி திருச்செங்கோடு அணியினருக்கும் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், துணை மேயர் சு.ப.தமிழழகன் ஆகியோர் பரிசு தொகை, கோப்பைகளையும் வழங்கினர். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் செந்தில் மற்றும் உதவியாளர்கள் சதீஷ்குமார் மற்றும் ரத்னசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.

Related Stories: