10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களில் பாதுகாப்பு புகார் பெட்டி அமைக்க வேண்டும்

திருவாரூர், செப்.27: திருவாரூர் மாவட்டத்தில் 10 பேருகளுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களில் பாதுகாப்பு புகார் பெட்டி அமைத்திட வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சகி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் டிஆர்ஓ சிதம்பரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) ஜோஸ்மின் சகாயா பிரமிளா, ஆர்டிஓ கீர்த்தனா மணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பெண்கள் தொடர்பான பாதுகாப்பு புகார் பெட்டியினை அலுவலர்களிடம் வழங்கி கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், பேசுகையில் தனியார் மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறையினால் பாதிக்கப்பட்டு வரும் பெண்கள் அதிலிருந்து மீண்டு வாழ சுகி ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் உளவியல் சட்டம் சார்ந்த ஆலோசனைகளும், சேவைகளும் வழங்கப்படுவதுடன் தேவைப்படும் பட்சத்தில் போலீசார் உதவி, மருத்துவ உதவி மற்றும் சட்ட உதவிகளும்வழங்கப்படும்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினரை அணுகி உரையாடுவதன் மூலம் இணக்கமான சூழ்நிலைகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் குடும்பத்துடன் வாழ்வதற்கு ஆவண செய்யப்படும் பட்சத்தில் அதன் பின்னர் தொடர் கண்காணித்தல் போன்ற சேவைகளும் வழங்கப்படும். அந்த வகையில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிப்பதற்காக பாதுகாப்பு பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் தங்கள் புகார்களை தாங்கள் பணிபுரியும் அரசு அலுவலகங்கள்மற்றும் தனியார் நிறுவனங்களில் வைக்கப்படும் புகார் பெட்டியில் தெரிவிக்கலாம். மேலும் 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் பெண் பணியாளர்களின் பாதுகாப்பினை கருதி அந்த நிறுவனங்களில் இது போன்று பாதுகாப்பு புகார் பெட்டி வைத்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: