20 சதவீதம் போனஸ் வழங்க கோரி கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்,செப்.27: 20 சதவீத போனஸ் வழங்கிட கோரி கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்க ஊழியர்கள் அனைவருக்கும் 20 சதவிகித போனஸ் தொகையும், 5 சதவிகித கருணை தொகையும் வழங்கிட வேண்டும். அனைத்து கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கிட வேண்டும். பொது விநியோகத் திட்டத்தினை தனித்துறையாக உருவாக்கிட வேண்டும். பயிர் கடன், நகை கடன், சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி தொகையினை கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும். 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஊதிய ஒப்பந்தம் செய்யப்படாத தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உடனடியாக ஊதிய ஒப்பந்தம் செய்திட வேண்டும்.

பண்டிகை கால முன்பணத்தினை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

500 குடும்ப அட்டைகளுக்கு மேல் இருந்து வரும் நியாய விலை கடைகளில் எடையாளர் பணி நியமனம் செய்திட வேண்டும். நியாய விலை கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 3 சதவீத அகவிலைப்படியினை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பாக சிஐடியு தொழிற்சங்கம் சார்புடைய கூட்டுறவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் முருகையன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: