தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிலரங்கம்

திருச்சி, செப்.27: திருச்சி அதவத்தூர் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் முதுகலை மற்றும் முனைவர் பட்டய படிப்பு ஆராய்ச்சி மாணவர்களுக்கான 10 நாள் திறன் மேம்பாட்டு பயிலரங்கத்தை“வாழை அறிவியல்” என்ற தலைப்பின் கீழ் கடந்த செப்டம்பர் 16ம் தேதி முதல் 26 ம் தேதி வரை ஒருங்கிணைப்பு செய்திருந்தது. இந்த பயிலரங்கம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இந்த பத்து நாள் பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள், ஆறு மாநிலங்களிலிருந்து கலந்து கொண்டனர்.

நிறைவு விழாவில் தலைமை உரையாற்றிய தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர், முனைவர் எஸ். உமா பேசும்பொழுது இன்று அறிவியலின் சாதனை பல தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. வாழையில் மரபணு மூலக்கூறு ஆராய்ச்சி முதல் விரிவாக்க ஆராய்ச்சி வரை எத்தனையோ புதிய முயற்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நவீன மாற்றங்களை இன்றைய தலைமுறை மாணவ ஆராய்ச்சியாளர்களுக்கு எடுத்து செல்வது என்பது தலையாயக் கடமை. இத்தகைய நோக்கில்தான் இந்த பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமும் இது போல் அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை இளம் தலைமுறையினரிடையே பரவலாக்கம் செய்து கொண்டுள்ளது என்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக முனைவர் நிக்கோலஸ் ரோக்ஸ், தலைவர், பயோவர்சிட்டி மையம், பிரான்ஸ் கலந்து கொண்டார். பயிற்சியில் 30 அறிவியல் கோட்பாடு வகுப்புகளும், 15 அறிவியல் பயிற்சி வகுப்புகளும், தொட்டியம் வாழை உற்பத்தியாளர் சங்கம் மற்றும் வாழை விவசாயிகளின் நிலங்களுக்கு, கண்டுனர் (கள) வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related Stories: