திருச்சி கோ.ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை ரூ.3 கோடி இலக்கு

திருச்சி, செப்.27: திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை நேற்று தொடங்கியது. திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் தள்ளுபடி விற்பனை துவங்கி உள்ளது. கடந்த ஆண்டு ரூ.1.43 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டு ரூ.3 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கனவு நனவு திட்டம் நடப்பாண்டு கோ-ஆப்டெக்ஸில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் 19 மாதம் தவணை பணம் செலுத்தினால் போதும், அடுத்த 2 மாதங்கள் கோ-ஆப்டெக்சே பணத்தை செலுத்தி 12 மாதங்கள் முடியும் தருவாயில் சேமித்த பணத்துக்கு வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். 30 சதவீத தள்ளுபடியில் சேலைகள், சட்டைகள் என புதுப்புது ரகங்கள் உள்ளன. இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் தஞ்சாவூர் மண்டலத்தில் ரூ.7.49 கோடி விற்பனை செய்யப்பட்டது’ என்றார். இதில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி, மேலாளர் (ரகம் மற்றும் பகிர்மானம்) அன்பழகன், திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: